கமல்ஹாசனுடன் வாக்குச் சாவடிக்கு சென்ற சுருதிஹாசன் மீது புகார்
தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாரதிய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடிக்குள் கமல்ஹாசனுடன் அவரது மகள் சுருதிஹாசன்.கோவை:
கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடும் வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கெம்பட்டி காலனியில் உள்ள வாக்குச்சாவடிக்கும் கமல்ஹாசன் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அவரது மகள் சுருதிஹாசனும் வாக்குச்சாவடிக்குள் சென்றார்.
தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாரதிய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் நந்தகுமார், தெற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
தெற்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் கமல்ஹாசனுடன் அவரது மகளும், நடிகையுமான சுருதி ஹாசன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். சுருதிஹாசன் தேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளார். எனவே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சுருதிஹாசன் மீது பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.