கனேடிய கௌரவ குடியுரிமையை பெற்றுக் கொண்டார் மலாலா

இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசினை வென்ற மலாலா யூசஃப்சாய் நேற்று (புதன்கிழமை) கனேடிய கௌரவ குடியுரிமையை பெற்றுள்ளார்.

கனேடிய நாடாளுமன்றில் எதிர்பார்க்கப்பட்ட விழாவாக நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், தூதுவர்கள் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் கைகளால் மலாலாவுக்கான கனேடிய கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சொற்திறன்மிக்க உருக்கமான உரை ஒன்றினையும் நிகழ்த்தினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மலாலா யூசஃப்சாய்க்கு கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரால் கனேடிய கௌரவ குடியுரிமை வழங்கப்படவிருந்தது. எனினும் அன்றையதினம் துப்பாக்கிதாரி ஒருவர் நாடளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியதுடன் தேசிய போர் ஞாபகார்த்த மண்டபத்தில் இராணுவ வீரர் ஒருவரையும் கொன்ற காரணத்தினால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்தும் நாடாளுமன்றில் மலாலா பகிர்ந்து கொண்டார்.

இதன்போது, ‘ நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியவர் தன்னை ஒரு முஸ்லிம் என்று அடையாளப்படுத்தியிருந்தார். ஆனால் அவர் என்னுடைய நம்பிக்கையை பெறவில்லை. உலகம் முழுவதும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒன்றரை பில்லியன் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறவில்லை.

இஸ்லாமியத்தையும் கற்கவில்லை. துப்பாக்கி ஏந்தியவாறு இஸ்லாமியம் என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்களை கொல்வதற்கு துணிபவன் முஸ்லிம் இல்லை என்று நான் நம்புகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் இடம்பெற்ற கியூபெக் பள்ளிவாசல் தாக்குதல், லண்டன் மெட்ரோ ரயில் தாக்குதல்களை வெறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !