கதுவா கற்பழிப்பு வழக்கை ஜம்முவில் விசாரிக்க கூடாது – வழக்கறிஞர் தீபிகா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது.

ஆனால், கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரோ, இவ்வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர்.

‘கதுவாவில் விசாரணைக்கு உகந்த சூழ்நிலை இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. எனவே, கதுவாவில் வழக்கை விசாரிக்க கூடாது. வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக சிறுமியின் தந்தையிடம் ஆலோசனை நடத்தி அதன்பின் மனு தாக்கல் செய்யப்படும்’ என அவர்களின் வழக்கறிஞர் தீபிகா தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !