கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போரிட வேண்டும்: கரோனா வைரஸ் குறித்து ட்ரம்ப்
கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போரிட வேண்டும் என்று கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், ”அமெரிக்காவில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 6,522 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நியூயார்க்கில் மட்டும் 1,707 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று செய்தி வெளியானது.
பெரும்பாலும் 60, 70, 80 வயதைக் கடந்தவர்களே கரோனா வைரஸால் உயிரிழந்ததாக அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கோவிட் -19 காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் ட்ரம்ப் தலைமையிலான அரசு இறங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அதிகாரிகளுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அதில் ட்ரம்ப் கூறுகையில், “கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் (கோவிட் காய்ச்சல்) போரிட வேண்டும். ஒரு நாள் இங்கு நின்றுகொண்டு நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூறுவோம். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறப் போகிறோம். நாங்கள் மக்கள் நினைப்பதைவிட வேகமாக வெல்லப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 1,79,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.