கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் என்டி முர்ரே!

பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீரரான என்டி முர்ரே, எதிர்வரும் அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடருடன் ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார்.

சமீபகாலமாக இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும், 31 வயதான என்டி முர்ரே, தொடர்ந்தும் தன்னால் விளையாட முடியாது என உடல் ரீதியாக உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்தாக அவர் கூறியுள்ளார்.

தனது ஓய்வு குறித்து என்டி முர்ரே கூறிய கருத்துக்கள் இவை, ‘என்னால் தொடர்ந்து விளையாடுவதில் சிரமம் ஏற்படுகின்றது. காயமே தன்னுடைய ஓய்வுக்கு காரணம். விம்பிள்டன் போட்டி வரை விளையாடி ஓய்வு பெறுவதே தன் விருப்பம். ஆனால் அதுவரை விளையாடமுடியுமா எனத் தெரியவில்லை’ என கூறினார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில், காயத்திலிருந்து மீண்டு களம் கண்ட என்டி முர்ரே, 2ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த தோல்வி கடுமையாக பாதித்ததும் அவரின் ஓய்வு காரணமாக பார்க்கப்படுகின்றது.

45 ஏடிபி பட்டங்கள் சம்பியன் பட்டங்களை வென்றுள்ள என்டி முர்ரே, 2016ஆம் ஆண்டு உலகின் முதல் நிலை வீரராகவும் வலம் வந்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், 3 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். இதில் 2013ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் விம்பிள்டன் சம்பியன் பட்டங்களும், 2012ஆம் ஆண்டு அமெரிக்க டென்னிஸ் தொடரும் அடங்கும்.

கடந்த 77 வருடங்களில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் பிரித்தானிய வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்தார் முர்ரே ஆவார்.

இதுதவிர, ஐந்து அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும், ஒரு பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

அத்தோடு, 2015ஆம் ஆண்டு டேவிஸ் கிண்ணம் வென்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். மேலும், 2012ஆம், 2016ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் ஃபோர் என்று சொல்லக்கூடிய கூட்டணியான ஃபெடரர், ஜோகோவிச், நடால் ஆகியோருடன் இணைந்து பேசப்பட்டவர் முர்ரே. ஆனால் அவருடைய சர்வதேசத் தரவரிசை தற்போது 230இற்க்கு இறங்கியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !