கட்சி பேதங்களின்றி ஒன்றிணைந்து நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சியை தோற்கடிக்க வேண்டும்: மங்கள

ஜனாதிபதியின் எல்லையற்ற நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் முயற்சிகளை கட்சி பேதங்களைக் கடந்து, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அறைகூவல் விடுத்திருக்கிறார்.
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைத்து தனது அக்கிராசன உரையை ஆற்றினார். அதன்போது தற்போதைய அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்குவதாக ஏற்கனவே ஜனாதிபதி கூறியிருந்த நிலையிலேயே அக்கிராசன உரையிலும் அரசியலமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். இதனையடுத்தே பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அவருடைய டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டிருக்கிறார். இப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
‘ஒரு அரசியலமைப்பு சூழ்ச்சிக்கான வருடமாக 2020 அமையப்போகின்றதா? ஜனாதிபதியின் எல்லையற்ற நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் ஏற்படுத்தி வலுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படவிருக்கும் முயற்சியை கட்சி பேதங்கள் அனைத்தையும் கடந்து, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்’ என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.