கட்சி தலைமை என்னிடம் அறிக்கை கேட்கவில்லை- தமிழிசை பேட்டி
தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. போட்டியிட்ட 5 இடங்களிலும் கடுமையான சரிவை கண்டது. இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து மத்திய பா.ஜ.க. தலைமை, தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
அகில இந்திய பா.ஜ.க. தலைமைக்கு தமிழகத்தின் நிலைமை நன்றாகவே தெரியும். தேர்தலை நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலிமையாகவே எதிர்கொண்டோம். இதுவும் கட்சியின் தலைமைக்கு தெரியும். கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி கோஷம் ஒலித்து கொண்டிருந்த நேரத்தில், பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த மாநிலங்களில் கட்சி தலைமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவலைப்படாதீர்கள், தொண்டர்களை உற்சாகமாக இருக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்கள்.
ஆனால் சிலர் வேண்டுமென்றே இதுபோன்று பரப்புகிறார்கள். கட்சி தலைமை எங்களிடம் தோல்விக்கான விளக்க அறிக்கை எதையும் கேட்கவில்லை. இது முற்றிலும் தவறானது. 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கிய, பண பலத்துடன் தேர்தலை சந்தித்த கனிமொழியை எதிர்கொண்ட என்னை கட்சி தலைமை பாராட்டத்தான் செய்தது.
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நான் தான் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து செல்ல இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.