கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் கருத்து! இந்திய ஊடகம் தகவல்
சீனாவிடம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசியுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ச, மூன்று நாட்கள் விஜயமாக இந்தியா வந்தார். இதன்போது, இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்திய விஜயத்தின் போது பேசிய கோட்டாபய ராஜபக்ச,
“ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கியது தவறு எனவும், இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த வாரம், கொழும்பிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்களிடம் பேசிய கோட்டாபய ராஜபக்ச, 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வணிக உடன்படிக்கையில் தனக்கு பிரச்சனை இல்லை என கூறியுள்ளார்.
அத்துடன், அந்த வணிக உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியில் சிக்கலை ஏற்படுத்தும் இந்த துறைமுக விவகாரத்தில் இந்தியாவில் ஒன்று பேசிவிட்டு, இலங்கைக்கு சென்று வேறு ஒன்றை பேசுகிறார் என கோட்டாபய ராஜபக்ச மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக” அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.