கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிப்பு
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த மாவட்டத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியிலேயே 91.5 மிமீ அளவிலான அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கேகாலை, தல்துவ பிரதேசத்தில் 83 மில்லிமீற்றர் மற்றும் வரக்காபொலவில் 63 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.