கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு!
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2009ஆம் ஆண்டுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டில்தான் தற்கொலை சதவீதம் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். 13,943 ஆண்களும், 6,976 பெண்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
இது 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 3.7 சதவீதம் அதிகம். 2009ஆம் ஆண்டில் ஜப்பானில் தற்கொலைகள் அதிகமாக இருந்தன. அதன் பிறகு தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக மீண்டும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தொடர் கொரோனா பரவலைத் தடுக்க அங்கு அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளது. ஒசாகா, க்யோடோ ஆகிய மாகாணங்களிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...