கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் பெண்ணிற்கு வெளிநாடு செல்ல தொடர்ந்தும் தடை!
சுவிஸ் தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடக் கோரி சி.சி.டி. தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது அவர் வெளிநாடு செல்வதற்கான தடையை 17 ஆம் திகதிவரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, அவரிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் 3 நாட்களாக விசாரணைகளை நடத்தினர்.
இந்த விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே, இது ஒரு நாடகம் என்றும், அரசுக்கு எதிரான சூழ்ச்சி என்றும் அமைச்சர்களும், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கூறி வருகின்றனர்.
சிங்கள ஊடகங்கள் சிலவும், குறித்த பெண் பணியாளர் பற்றிய தனிப்பட்ட தகவல்கள், படங்களை வெளியிட்டும், அவரை குற்றவாளியாக சித்திரித்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், குறித்த அதிகாரியை பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக சிறையில் அடைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.
சுவிஸ் தூதரக அதிகாரி தான் கடத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறியிருந்தால், குற்றவியல் சட்டத்தின் கீழ், அவருக்கு 2 தொடக்கம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.