கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம்

பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில் வசித்து வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை (50). இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களும் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 16ம் திகதி 110 கிமீ வேகத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், செல்லத்துரையின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. புதிய வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதியில்லாத செல்லத்துரையின் குடும்பத்தினர், தங்குவதற்கு வேறு இடமின்றி அருகில் உள்ள சுடுகாட்டில் அமைந்துள்ள சமாதியில் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி செல்லத்துரை கூறியதாவது; “கஜா புயல் எங்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. வீட்டை இழந்த நாங்கள் சுடுகாட்டில் உள்ள சமாதியில் டெண்ட் அமைத்து வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசோ, அல்லது தனியார் அமைப்புகளோ வீடு கட்டுவதற்கு உதவிக் கரம் நீட்டினால் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !