Main Menu

ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு, சுமார் 800 மில்லியன் டொலர்கள் செலவாகும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.

பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு, அந்த நகர நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ளும். ஜப்பான் இந்த ஒலிம்பிக் போட்டிக்காக சுமார் 12.6 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது.

தற்போது ஒரு வருடத்திற்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 800 மில்லியன் டொலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணத்தை போட்டி அமைப்பாளர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

“ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படும் வகையில் டோக்கியோ 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை, அடுத்த வருடம் சிறப்பாக நடத்தி முடிக்க நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டதில் இருந்து ஒரு வருடம் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. எதிர்காலம் திட்டம் குறித்து எந்தவொரு ஊகங்களையும் நாம் தெரிவிக்க இயலாது” என கூறினார்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த வருடம் ஜூலை 23ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.