ஒரு பயணியுடன் மட்டுமே கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம்!
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கோடை விடுமுறையை சிறிலங்காவில் கழிப்பதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஆசனங்களை பெரும்பாலானோர் ரத்துச் செய்து வருகின்றனர். இதனால் விமான நிறுவனங்கள் தடுமாறத் தொடங்கியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில், மிகக் குறைந்தளவு சுற்றுலாப் பயணிகளே கொழும்பு வந்துள்ளனர்.
சிறிலங்காவுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வரும், ஐரோப்பிய நாடுகளின் நகரங்களில் இருந்து வரும், விமானங்களின் இருக்கைகள், வெறுமையாகவே இருக்கின்றன.
இதனால், பல்வேறு விமான நிறுவனங்கள் சிறிலங்காவுக்கான பயணங்களை மட்டுப்படுத்துவது குறித்தும் யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.