ஒருபோதும் சர்வதேசத்திற்கு தலைகுனிந்ததில்லை: ஐ.தே.க.

எக்காரணத்திற்காகவும் நாம் சர்வதேசத்தின் முன் தலைகுனியவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற சூழ்ச்சியினால், இத்தனை மாதங்களாக நாம் வரவு செலவு திட்டமொன்று இல்லாமல்தான் இந்நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இக்காலங்களில் அரச ஊழியர்கள் மட்டுமன்றி எந்தவொரு தரப்பும் பாதிக்காத வகையிலேயே நாம் செயற்பட்டு வருகிறோம்.

இதனால், சமர்ப்பிக்கப்பட்டுள்ள இவ்வரவு செலவு திட்டமானது மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. எஞ்சிய 8 மாதங்களில் பாரிய வேலைத் திட்டங்களை செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு வந்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியால் நாம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தோம். எனினும், எக்காரணத்திற்காகவும் நாம் சர்வதேசத்திற்கு முன்னால் தலைகுனியவில்லை.

மக்களுக்கும் நாம் சிக்கலை ஏற்படுத்தவில்லை. அதேபோல்தான் இவ்வரவு செலவு திட்டத்திலும் மக்களை ஏமாற்றாத பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

இதனால், எந்தவொரு தரப்பும் புறக்கணிக்கப்படவில்லை. இதனை முன்னிட்டு நீதியமைச்சருக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !