ஒப்பந்தத்துடன் கூடிய பிரெக்ஸிற்றே எமது இலக்கு: ஜேர்மன் அதிபர்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா பரஸ்பர உடன்படிக்கை ஒன்றுடன் வெளியேறுவதை உறுதிசெய்வதே தமது இலக்கு எனவும் அதற்குரிய முயற்சிகளை தமது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தமது மத்திய அரசும் 16 மாநிலங்களும் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றைச் சமாளிப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதற்கு ஜேர்மனி ஆதரவளிக்காது என அங்கெலா மேர்க்கலின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஐரிஷ் எல்லை தொடர்பான விடயத்தில் ஜேர்மனியின் முழு ஆதரவும் அயர்லாந்துக்கே என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒருவராகத் திகழ்ந்து வருவதால் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த விடயத்தில் ஜேர்மனியின் ஆதரவு பிரித்தானியாவுக்கு அவசியமாகும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !