ஒக்ரோபர் 31 ல் பிரித்தானியா வெளியேற வேண்டும் : பிரதமர்

பிரெக்ஸிற் குறித்து 2016 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் ராஜினாமாச் செய்வீர்களா என்ற கேள்விக்கு நேற்று (வியாழக்கிழமை) பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒக்ரோபர் மாத இறுதியில், ஒரு ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவதாக பிரதமர் ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.
அத்தோடு ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை நிறுத்த முயற்சிப்பதாக சபதம் செய்தவர்கள் மற்றும் அரசாங்கத்தை உடைக்க முயற்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து கேட்டகப்பட்ட கேள்வுக்கு பதிலளித்த அவர், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை அரசியல் தலைவர்கள் எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதை மக்கள் பார்க்க ஆசைப்படுகின்றனர் என கூறினார்.