ஐ.நா. பிரேரணையை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவுக்கு ஆதரவு – கூட்டமைப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் கூட்டமைப்பு முன்வைப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், சிறுபான்மை கட்சிகள் தமது ஆதரவு குறித்து படிப்படியாக வெளிப்படுத்தி வருகின்றன.

இதேவேளை, இலங்கையில் இறுதி யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதற்கு இலங்கை அரசாங்கமும் ஆதரவு வழங்கியது. எனினும், அதனை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை அமுல்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !