ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை உதாசீனம் செய்யக்கூடாது – சந்திரிகா

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான அறிக்கை என்றும் அதனை எவரும் உதாசீனம் செய்யக்கூடாது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியே இலங்கை மீதான ஐ.நா. வின் இறுக்கமான பிடிக்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில் “மைத்திரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியால் இலங்கை பெரும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிவரும் என நான் ஏற்கனவே எச்சரித்தேன்.

அதன் ஒரு பிரதிபலிப்பே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கையாகும்.

இலங்கையில் அரசியல் சூழ்ச்சியை முடிவுக்கொண்டுவர அயராது பாடுபட்ட வெளிநாடுகள் தற்போது ஜெனிவாவில் இலங்கையை தங்கள் பிடிக்குள் வைத்துள்ளன.

நாட்டின் ஜனாதிபதியும் அரசும் ஐ.நா. வுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தை வெறும் போர்க்குற்ற தீர்மானம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைக்கின்றார்.

முதலில் அதில் உள்ள நாட்டின் எதிர்காலம் நலன் சார்ந்த பரிந்துரைகளை ஜனாதிபதி பொறுமையுடன் இருந்து வாசிக்க வேண்டும். அதனை உடன் செயற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேவேளை, இலங்கை தொடர்பாக ஐ.நா. வில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானத்தின் பரிந்துரைகளை உடன் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆட்சியிலுள்ள அனைவரும் எடுக்கவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !