ஐ.எஸ். தாக்குதலில் பிரித்தானிய இராணுவத்தினர் படுகாயம்!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பிரித்தானிய சிறப்பு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரித்தானிய சிறப்புப் படையினர் சிரியாவில் செயற்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. எனினும், அதனை சிரிய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தவில்லை.

சமூக ஊடகங்களின் தகவல்களின் பிரகாரம், டெயிர் அல் ஜோர் நகரில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில், குறித்த இரு இராணுவத்தினரும் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறப்புப் படைகள் தொடர்பாக கருத்து வெளியிட முடியாதென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அங்கு நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புக்களை மீளப்பெறவுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் அறிவித்தார். இது பல நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பல விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா முன்னின்று செயற்படும் நாடுகளில், பிரித்தானியாவும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றது. எனினும், சிறப்புப் படையினர் செயற்பட்டு வருகின்றமை தொடர்பாக இதுவரை எவ்வித கருத்தையும் பிரித்தானியாவும் முன்வைக்கவில்லை. ஆனால், பிரித்தானிய சிறப்புப் படையினர் சிரியாவில் நிலைகொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 33 வயதான பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !