ஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்றுப்போனாலும் அந்த போராட்டத்திற்கான நியாயமும், அதற்காக அவர்கள் செய்த தியாகங்களும் தோற்றுப்போகவில்லை என்பதையும் அந்த தியாகங்களை நினைவு கூரும் நாளாகவும் வருடாவருடம் நவம்பவர் 27ல் மாவீரர் நாள் அனுடிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனே அந்த இயக்கத்தில் முதலில் பலியான போராளியாகும். சிறிலங்கா படையினருடனான மோதலில் காயமடைந்த சங்கர் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வந்த வேளை 1982ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் மாலை 6.05மணியளவில் மரணடைந்தார்.
அந்த நாளையே விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாளாக 1989ஆம் ஆண்டு அறிவித்தார். 1989ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டுவரை மாவீரர் நாள் நிகழ்வுகள் விடுதலைப்புலிகளின் கட்டுபபாட்டில் இருந்த பிரதேசங்களில் நடைபெற்று வந்தது.
தாயகத்தில் மாவீரர் நாள் நடத்தப்பட்ட 1989ஆம் ஆண்டு லண்டனில் கிட்டு தலைமையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறிய ஒரு இடத்தில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1990களின் பின் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் முறியடித்து உயர்ந்து நிற்பது வீரமரணத்தை தழுவிக்கொண்ட ஒவ்வொரு போராளியின் தியாகங்கள் தான். அந்த தியாகிகளை தமிழ் மக்கள் நினைவு கூரும் நாளாக மாவீரர்நாள் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
மாவீரர் வாரம் ஆரம்பமானதும் விடுதலைப்புலிகளை விட இராணுவமே உசார் அடைந்து பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரிப்பது வழக்கமாகும். எத்தனை இராணுவ கெடுபிடிகள் இருந்தாலும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருக்கும் மக்களும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி செல்ல தவறுவதில்லை.
கஞ்சிக்குடிச்சாறு, தரவை தாண்டியடி கல்லடி ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான்,  தியாகவனம் பெரியகுளம் மணலாறு ஜீவன்முகாம் டடிமுகாம் ஈச்சங்குளம்  முள்ளியவளை அலம்பில் ஆலங்குளம் வன்னிவளாங்குளம் மாவீரர் கிளிநொச்சி விசுவமடு முழங்காவில் சாட்டி கோப்பாய் எல்லங்குளம், உடுத்துறை, ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டு நினைவு வணக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
மாவீரர் துயிலும் இல்லங்களில் மாலை 6.05 மணிக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் நாள் உரையும் அதனை தொடர்ந்து நெஞ்சை உருக்கும் தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தணப்பேழைகளே என்ற மாவீரர் நாள் கீதம் ஒலிக்க ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தும் நிகழ்வை நேரில் பார்க்கும் யாரும் கண்கலங்காமல் இருக்க முடியாது.
தங்கள் பிள்ளைகள் உறவுகளை இழந்தவர்கள் கல்லறைகளில் தலைவைத்து கதறி அழும் நெஞ்சை உருக்கும் காட்சிகள் நினைவிலிருந்து அகற்ற முடியாதவை.
உக்கிரமான போர் நடைபெற்ற காலத்தில் மாவீரர் வாரம் ஆரம்பமானால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் வீதிகளை இராணுவம் அடைத்து விடும். இந்த தடைகள் கெடுபிடிகளையும் தாண்டி இராணுவத்தின் கண்ணில் படாது காட்டுப்பாதைகள் வழியாக தரவை, தாண்டியடி போன்ற மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்ற அனுபவங்கள் திகில் நிறைந்தவை.
மக்களும் அவ்வாறுதான் தமது உயிரை பணயம் வைத்து தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி செல்வார்கள். அவைதான் உணர்வுபூர்வமான உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
2006ல் கிழக்கை கைப்பற்றிய இராணுவம் அங்கிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும் அழித்து தரைமட்டமாகியது. 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியிலிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் போரில் இறந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையையும் இலங்கை அரசு பறித்து விட்டது.
இந்நிலையில் போரில் இறந்த போராளிகளுக்கு சுதந்திரமாக அஞ்சலி செலுத்தக் கூடிய ஒரு சூழல் ஐரோப்பா, ஒஸ்ரேலியா, கனடா போன்ற மேற்குலக நாடுகளிலேயே காணப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் 1989ல் லண்டனில் முதலாவது மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும் 1993ஆம் ஆண்டுகளின் பின்னரே பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.
ஆனாலும் இலங்கையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடத்தப்படும் ஒழுங்கு முறைகளோ அல்லது உணர்வு பூர்வமானதாகவோ ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் மாவீரர்நாள் நிகழ்வுகள் இருப்பதில்லை,
மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் தலைவரின் உரை, ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இதை தவிர வேறு நிகழ்ச்சிகளுக்கு இடமிருக்காது. மாவீரர்களுக்கான அஞ்சலிக்கே அங்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆடல்பாடல் பேச்சு என மாவீரர் நாள் நிகழ்வுகளை திசை திருப்பும் வகையிலேயே அமைந்திருக்கும். மலர் விற்பனை, கொத்துறொட்டி வியாபாரம், என பணம் திரட்டலுக்கே அங்கு முக்கியத்துவம் இருக்கும்.
முன்னர் வன்னியில் இருந்த தலைமைப்பீடத்தின் வழிநடத்தலில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும் 2009ஆம் ஆண்டின் பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வியாபாரமாக மாற்றப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒவ்வொரு நாடுகளிலும் இருந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பே செய்து வந்தது.
2009ல் யுத்தம் முடிந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பல கூறுகளாக பிளவு பட்டன. 2009ஆம் ஆண்டின் பின்னர் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட போராளிகள் பலரும் ஐரோப்பாவிற்கு வந்தனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் சேர்க்கப்பட்ட பெருந்தொகையான பணங்களும் எங்கு சென்றது? யாரிடம் உள்ளது ? என்ற விபரங்களும் மறைக்கப்பட்டன. தலைவர் வந்து கேட்டால் மட்டுமே அவர்களிடம் கணக்கு காட்டுவோம் என ஐரோப்பிய நாடுகளில் இருந்த நிதிப்பொறுப்பாளர்கள் அறிவித்தனர்.
இந்த குழப்பங்களால் மேற்குலக நாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பல கூறுகளாக பிளவு பட்டன. 2009ஆம் ஆண்டின் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த போராளிகள் விநாயகம் தலைமையில் போராளிகள் கட்டமைப்பு என்ற அமைப்பையும் உருவாக்கினர்.
விநாயகம் தலைமையிலான போராளிகள் கட்டமைப்பு கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பிரான்ஸ் உட்பட லண்டன், கனடா ஆகிய நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்வுகளை தாங்கள் தனியாக நடத்தினர். இதனால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடத்திய மாவீரர்நாள் நிகழ்வுகளில் வருமானம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தது. கடந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவே மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தியது.
இம்முறை பிரான்ஸ், லண்டன், கனடா ஆகிய நாடுகளில் இரு பிரிவுகளாக மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தப்பட உள்ளன. இதனால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் போராளிகள் கட்டமைப்புக்கும் இடையில் கடுமையான மோதல்கள் எழுந்துள்ளன.
வாள்வெட்டு வன்முறைக்கலாசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் பிரான்ஸ் பரிஸ் நகரில் வாள் வெட்டு கத்திக்குத்து போன்ற வன்முறைகளுடன் மாவீரர் வாரம் ஆரம்பமாகியிருக்கிறது.
பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களில் தமிழ் இயக்கங்களுக்கிடையில் வாள் வெட்டு படுகொலைகள் வன்முறைகள் என்பன புதியவை அல்ல. இவர்களுக்குள் அடிக்கடி நிகழும் சம்பவம் தான்.
பிரான்ஸில் 40க்கு மேற்பட்ட வாள்வெட்டுக்குழுக்கள் உள்ளன. இதில் 700க்கு மேற்பட்டவர்கள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர். கப்பம் வாங்குவது, கூலிக்கு ஆட்களை வெட்டுவது, கடத்துவது போன்ற வன்முறைதான் அவர்களின் முழுநேர தொழிலாகும்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உட்பட தமிழ் இயக்கங்கள் ஒவ்வொரு வன்முறைக்குழுக்களை வைத்திருக்கின்றன. இதுதவிர சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் சிறிரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய குழுக்களும் வாள்வெட்டுக்குழுக்களாக இயங்கி வருகின்றன.
பிரான்ஸில் தமிழ் கடைக்காரர்கள், வட்டிக்கு கொடுப்பவர்கள், உட்பட தனிநபர்களும் இந்த வாள்வெட்டுக்குழுக்களை பயன்படுத்துகிறார்கள்.
தமது பிள்ளை வேறு குறைந்த சாதியை சேர்ந்தவர் அல்லது தமக்கு விருப்பம் இல்லாதவரை காதலித்தால் அதனை தடுப்பதற்கு இந்த வாள்வெட்டுக்குழுக்களை பயன்படுத்துகின்றன.
அண்மையில் பாரிஸ் நகரில் உள்ள தமிழர் ஒருவரின் மகள் சாதி குறைந்த இளைஞனுடன் சென்று விட்டார். உடனடியாக அப்பெண்ணின் தந்தை வாள்வெட்டு குழு ஒன்றை நாடி தமது மகளை மீட்டுத்தருமாறும் 30ஆயிரம் ஈரோ தருவதாகவும் ( இலங்கை ரூபாவில் 50 இலட்சம் ) கூறியிருந்தார். அந்த வாள்வெட்டுக்குழு காதலர்கள் இருந்த இடத்தை தேடி பிடித்து இளைஞனை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு பெண்ணை மீட்டு வந்து தந்தையிடம் ஒப்படைந்தனர். தருவதாக ஒப்புக்கொண்ட தொகையை விட அதிக பணம் அந்த வாள்வெட்டுக்குழுவுக்கு வழங்கப்பட்டதாக தகவல்.
பிரான்ஸ் பொலிசும் இவற்றை கண்டுகொள்வதில்லை. பாதிக்கப்படுபவர்களும் அச்சம் காரணமாக குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில்லை.
வாள்வெட்டுக்குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த பரிஸ் லாச்சப்பலில் கடந்த திங்கட்கிழமை போராளிகள் கட்டமைப்பை சேர்ந்தவர்களால் மாவீரர் நாள் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருந்த போதே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் போராளிகள் கட்டமைப்பை சேர்ந்த குணம், ரூபன் ஆகியோரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுடன் இணைந்து வேலை செய்யும் முன்னாள் போராளியான ஜெயக்குமார் என்பவரும் வாள்வெட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
தமிழர்கள் அதிகம் கூடும் பாரிஸ் லாச்சப்பலில் ஒரு தரப்பு மாவீரர் நாள் சுவரொட்டிகளை ஒட்டி விட்டு சென்ற உடன் அதனை மற்றத்தரப்பு கிழித்து விட்டு ஒட்டி வருகின்றனர்.
வாள்வெட்டு சம்பவம் நடைபெற்ற திங்கட்கிழமை மாலை மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விளம்பரத் துண்டுப்பிரசுரங்களை லாச்சப்பல் பகுதியில் வைத்து போராளிகள் கட்டமைப்பை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு விநியோகித்துக்;கொண்டிருந்தனர்.
அந்த இடத்திற்கு வந்த பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த சுரேஷ் என்பவர் வெண்ணிலா என்ற வாள்வெட்டு வன்முறைக்குழுவின் தலைவருக்கு தகவல் அனுப்பினார். உடனடியாக அவர் தனது அடியாட்கள் 5பேரை வாள்கள் கத்திகளுடன் லாச்சப்பல் பகுதிக்கு அனுப்பி வைத்தார். அங்கு வந்த வாள்வெட்டுக்குழுவுக்கு முன்னாள் போராளிகளை அடையாளம் காட்டி விட்டு அந்த இடத்தை விட்டு சுரேஷ் என்பவர் சென்று விட்டார்.
வாள்களுடன் வந்த வெண்ணிலா வாள்வெட்டுக்குழு இங்கு என்ன செய்கிறீர்கள்? மாவீரர்நாள் நிகழ்வுகளை நீங்கள் நடத்த முடியாது என கூறி அங்கு நின்றவர்கள் மீது தாக்கினர். இச்சம்பவம் நடைபெற்ற போது தமிழர் ஒருங்கிணைப்புக்குவினருடன் தற்போது இணைந்து வேலை செய்யும் ஜெயக்குமார் என்ற போராளியும் அங்கு வந்திருக்கிறார். அவரையும் போராளிகள் கட்டமைப்பை சேர்ந்தவர் என எண்ணிய வெண்ணிலா வாள்வெட்டு குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர்.
இதன் பின்னர் ஜெயக்குமார் என்பவரை தாம் அடையாளம் தெரியாமல் வெட்டி விட்டதாக வெண்ணிலா குழு தலைவர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடம் மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இயக்கங்களுக்கிடையில் பாரிஸில் வாள் வெட்டுச்சம்பவம் நடைபெறுவது இது முதல் தடவையல்ல.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்ற தமிழ் அமைப்புக்கள் உள்மோதல்களுக்கும் இந்த வாள்வெட்டு வன்முறைக்குழுக்களை பயன்படுத்தி இருக்கின்றன.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கிய உறுப்பினரான பரிதி என அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் 2012ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி பரிஸ் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் சிறிரெலோ என்ற வன்முறைக்குழுவே இக்கொலையை செய்ததாக கூறப்படுகிறது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த ஓருதரப்பே சிறிரெலோவை வைத்து இக்கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
அது போன்று தமிழ் இயக்கங்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வாள்வெட்டு வன்முறை குழுக்களை பயன்படுத்திக்கொள்கின்றன.
யுத்தம்  முடிந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும்  பில்லியன் கணக்கான ஈரோக்கள், பவுண்கள், பிறாங்குள் சிலரின் கைகளில் முடக்கப்பட்டுள்ளது அந்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. தலைவர் வந்தால் கணக்கு விபரத்தை தருவோம் என பணங்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் கூறிவருகின்றனர். தலைவர் வரமாட்டார் என்பதில் அவர்கள் திடமான நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.  இந்த கணக்கு விபரங்களை காட்டுமாறு 2009வரை யுத்தகளத்தில் நின்று பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த முன்னாள் போராளிகள் கோரிவருகின்றனர்.
மாவீரர் நாள் நடத்துவது கூட இன்று மிக இலாபம் தரும் ஒன்றாக மாறிவிட்டது. இந்த இலாபத்தை ஈட்டுவதற்கும்  முன்னைய பணத்தைப் பாதுகாப்பதற்கும் புதிய வருவாயைத் தேடிக்கொள்வதற்குமான மோதல்களே இன்று ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இயக்கங்கள் மத்தியில் நடைபெறுகின்றன.
களத்தில் நின்று போராடிய போராளிகள் அங்கவீனர்களாக தெருக்களில் அனாதைகளாக கைவிடப்பட்டு குண்டுகள் தாங்கிய உடல்களுடன் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கின்றனர். மாவீரர் குடும்பங்கள் ஒரு நேர உணவுக்காக தெருத்தெருவாக அலைந்து திரிகின்றனர்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மாவீரர்களை வைத்து நடத்தப்படும் வியாபாரப் போட்டிகள் வாள்வெட்டு கொலைகள் என வன்முறைகளாக மாறிவிட்டன.
ஐரோப்பிய நாடுகளில் மாவீரர்களை வைத்து நடத்தப்படும் அநியாயங்களையும் மோசடிகளையும் வியாபாரங்களையும் தாயகக்கனவுடன் மடிந்து போன மாவீரர்கள் ஆத்மா ஒரு போதும் மன்னிக்கப்போவதில்லை.
சுவிட்சர்லாந்திலிருந்து இரா.துரைரத்தினம் 

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !