ஐந்தாவது நாளாகவும் முருகன் உண்ணாவிரதப் போராட்டம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.

வேலூர் மத்திய சிறையில், இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் நீடிக்கிறது.

கடந்த 28 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், தன்னையும் தன் மனைவி நளினியையும், விடுதலைச் செய்யக்கோரி முருகன், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழக ஆளுநரிடம் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீது இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், மன உளைச்சலுக்குள்ளான முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக, அவரது வழக்கறிஞர், புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று ஐந்தாவது நாளாக உண்ணாவிரதமிருந்து வரும் முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

கடந்த மாதம் 20 ஆம் திகதியும் முருகன் முன்விடுதலை கோரி, இதுபோன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !