ஐதராபாத்தில் நடந்த ஆர்யா – சாயிஷா சைகல் திருமணம்; திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஆகியோருக்கு நடைபெற்ற திருமணத்தை ஒட்டி, ஏராளமான திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது
திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் நேரில் வாழ்த்து
தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்யா. இதையடுத்து பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், ராஜா ராணி, வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இதேபோல் ’வனமகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா சைகல்.

இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். பின்னர் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதற்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்திருந்தனர். இவர்களது திருமணம் மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 9ஆம் தேதி ஆர்யா – சாயிஷா சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலிவுட்டின் பிரபலமான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். சென்னையில் வரும் 14ஆம் தேதி ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !