ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் – சிவசக்தி ஆனந்தன்
தற்போதைய சூழலில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இணைந்த வடக்கு–-கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவதையே உடனடி இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். அப்படியிருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, அரைவேக்காட்டு அரசியலையே வெளிப்படுத்துகின்றது. இதுவே கொள்கையிலிருந்து விலகிச் செல்லும் கூட்டமைப்புக்கு மாற்றான வலுவான அணி ஐக்கியமாக உருவாகுவதற்கும் தடையாக இருக்கின்றது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு:
கேள்வி:- விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி ஒரு கட்டமைப்பாக அமைவதில் எவ்வாறான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன?
பதில்:- முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலான செய்திகள் வெளிவரும்.
கேள்வி:- இந்தக் கூட்டணியில் யாரெல்லாம் இணையலாம் என்பது தொடர்பில் உங்களுக்கு நிபந்தனைகள் உள்ளனவா?
பதில்:- தமிழ்த் தேசிய இனத்தின் இன்றைய அரசியல் சூழல் ஒரு பாரிய நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. மக்கள் போராடிக் களைத்துப் போயுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு தலைமை வேண்டும். அந்தத் தலைமையை ஒரு தனிநபரோ, ஒரு கட்சியோ வழங்க முடியாது என்பதே யதார்த்தம். பலதரப்பினரையும் அழைத்து ஒரு மேசையில் அமரவைத்து கலந்துரையாடுவதே கடினமான நிலையில், முன் நிபந்தனை விதித்தல் சாத்தியமற்றது.
இன்றைய சூழலில் இணைந்த வடக்கு-–கிழக்கில் சமஷ்டி முறைமை யிலான ஆட்சியை அமைப்பதற்கும் அதற்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் விருப்பம் உடையவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது அவசியம். இந்தத் தேவையைப் புரிந்துகொள்ளும் அனைவரையும் ஓரணியில் திரட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற ஜனநாயகத்தினூடாக எமது உரிமைக் கோரிக்கையை காத்திரமாகவும் வினைத்திறன்மிக்க வகையிலும் முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தமிழரசுக் கட்சி தனது ஏகபோக தலைமையை நிலைநாட்டிக்கொண்டதுடன், தனது சுயநலன்களைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்துடன் கைகோர்த்துச் செயற் படுகின்றது.
இதன் விளைவாக அரசாங்கம் அரசி யல் தீர்வு முயற்சியை திசை திருப்பும் வகையில் நாள்தோறும் புதுப்புது பிரச்சினைகளைத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் உருவாக்குகிறது. ஏற்கனவே அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற அன்றாடப் பிரச்சினைகள் நிலுவையில் இருக்கையில், தற்பொழுது தமிழர்களின் வழிபாட்டிடங்கள் திட்டமிட்டு பௌத்தமயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்கெதிராகவும் போராடவேண்டியுள்ளது.
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய அதே நேரத்தில் அன்றாடம் புதிதுபுதிதாகக் கிளப்பப்படும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே முன்னெப்போதையும்விட கூடுதலான கவனத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது. இன்றைய சூழலில் தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது மிகவும் அவசியம்.
கேள்வி:- ஈ.பி.ஆர்.எல்.எப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் கொள்கை ரீதியான வேறுபாடு காணப்படு
கின்றதா?
பதில்:- தற்போதைய, சூழலில் எந்த வொரு தமிழ் அரசியல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இணைந்த வடக்கு-–கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவதையே உடனடி இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். அணுகுமுறையிலும், செயல்முறையிலும் வேறுபாடு இருக்கலாம். யதார்த்தம் இவ்வாறு இருக்கையில் ஏதோ ஈ.பி.ஆர்.எல்.எப். கொள்கையிலிருந்து தடம் மாறிவிட்டதாகவும் தாங்கள் தான் உண்மையான அசல் கொள்கைப் பற்றாளராகவும் காட்டிக்கொள்ள முனையும் அரசியல் அரைவேக்காட்டுத்தனமே ஐக்கியத்திற்குப் பிரச்சினையாக உள்ளது.
தனது பாட்டன் சொத்தான கட்சியுடன் இணைந்து அந்த சின்னத்தில்தான் அனைவரும் போட்டியிட வேண்டும் என்பதில் குறியாக இருந்து, தமிழரசுக் கட்சியைப் போன்றே தானும் தனது ஏகபோக தலைமையை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுகின்றது. அதற்கான காய்நகர்த்தலை மேற்கொள்வதை ஏனையோர் புரிந்துகொண்டுவிடுவதால் தனது அரசியல் அனுபவமின்மையின் காரணமாக விரக்தியடைந்து ஏனையோரை கண்டபடி விமர்சிக்கிறது.
தமிழ்மக்கள் பேரவையிலும் அதனைத் தொடர்ந்து ஏனைய அரசியல் செயற் பாடுகளிலும் இவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படலாம் என்று நாம் நினைத்திருந்த வேளை, தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸுக்கும் இடையில் குணாம்சத்தில் வித்தியாசம் இல்லை என்பதை இந்த அரசியல் அரைவேக்காடுகளும் நிரூபித்து விட்டன. ஒருநாடு இரண்டு தேசம் என்பதை வெளியில் சொல்லிக்கொண்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் ஒற்றையாட்சி பழைய யாப்பையே இன்றளவும் பின்பற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனக்கென்று ஒரு யாப்பை உருவாக்கியிருக்கிறதா? அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பது சமஷ்டியைக் குறிக்கிறதா அல்லது இரண்டு தேசம் ஒரு நாடு என்பதைக் குறிக்கிறதா? அல்லது ஒற்றையாட்சியைக் குறிக்கிறதா? அகில இலங்கை என்பதன் கருத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாத ஞானசூன்யங்கள் ஏனையோரை கொள்கையிலிருந்து விலகி விட்டார்கள் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
இலங்கை தேசிய காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியாக மாறியதன் பின்னர், தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காக ஜி.ஜி.பொன்னம்பலம் அன்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸை தோற்றுவித்தார். அவர் பாராளுமன்றத்தில் 50:50 என்ற முழக்கத்தை முன்வைத்துச் செயற்பாட்டாரே அன்றி ஒரு போதும் ஒற்றையாட்சிக்கு எதிராகச் செயற்படவில்லை. மேலும் சமஷ்டி தமிழர்களுக்கு ஒத்துவராது என்றும் பேசியவர். பாராளுமன்றத்தில் 50:50 கோஷத்தை முன்வைத்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தனக்கு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்வதற்காக பத்து லட்சம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் அவர்கள் நாடற்றவர்கள் ஆவதற்கும் துணை போயிருந்தார். ஜி.ஜி.யின் இச்செயலின் காரணமாகவே தந்தை செல்வா காங்கிரஸிலிருந்து பிரிந்து இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார். இது வரலாறு.
மக்கள் செல்வாக்குடன் இருந்த தந்தை செல்வா, அரசியலில் ஜி.ஜி. ஓரங்கட்டப்பட்ட போதிலும் அவரது வீட்டிற்கே சென்று அவருடன் உரையாடி சௌமியமூர்த்தி தொண்டமானையும் உள்ளடக்கி தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினார். பின்னர் இதுவே தொண்டமான் தவிர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாறியது. இதுவும் வரலாறு. ஜி.ஜி. மறைந்த பின்னர் அவரது மகன் குமார் பொன்னம்பலம் கூட்டணி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த வேளையில் அமிர்தலிங்கம் மறுத்துவிட்டார். அதனால் கோபம் கொண்டு சுயேட்சையாகப் போட்டியிட்டதுடன், பின்னர் ஐ.தே.கவிடம் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியையும் மீட்டெடுத்துக்கொண்டார். இது காங்கிரஸின் வரலாறு.
இன்று நேர்மையின் உறைவிடமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் குமார் பொன்னம்பலத்தின் புதல்வர் காங்கிரஸின் மேற்படி தவறுகளை மறைப்பதற்காகவே அந்தக் கட்சியைத் தேர்தலுக்கான கட்சியாகவும் சின்னமாகவும் வைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியப் பேரவை போன்ற புதுப்புது பெயர்களில் கட்சியை ஆரம்பிக்கின்றார். இவற்றில் ஒருவர்கூட புதிதாக இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கையைக்கூட அவர் எடுக்கவில்லை.
கஜேந்திரகுமார் தனக்கென்று ஒரு பெரிய மக்கள் ஆதரவுத் தளம் இருப்பதுபோலவும் தன்னால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பது போலவும் தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்கின்றார். அவர் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். கடந்த நாற்பதாண்டுகால ஆயுதப் போராட்ட வரலாற்றில் கஜேந்திரனின் அரசியல் பங்களிப்பு எத்தகையது என்பதை மக்கள் அறிவார்கள்.
ஒரு கட்சிக்கு நட்புச்சக்திகள் யார்? நேச சக்திகள் யார்? ஆதரவாளர்கள் யார்? நட்பு நாடு எது? ஏனைய நாடுகளை எப்படி எமது நியாயமான கோரிக்கையின்பால் வென்றெடுப்பது போன்ற சிந்தனைத் தெளிவும் அணுகுமுறையும் அவசியம். இவற்றை அரசியல் அரைவேக்காடுகளிடம் எதிர்பார்ப்பது கடினம் தான். எனவே எம்மீது சேறுபூசுவதற்கு கஜேந்திரகுமாருக்கு அனுபவமும் போதாது; அருகதையும் கிடையாது.
கேள்வி:- கூட்டமைப்பிலிருந்து நீங்கள் வெளியேறியபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் காணப்பட்ட நெருக்கமான உறவில் விரிசல் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?
பதில்:- காங்கிரஸின் கபடத்தனம் எமக்குப் புரிந்துவிட்டது தான் காரணம். ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினால் அதற்கு ஒரு பொதுப்பெயரும் சின்னமும் கிடைக்கும் என்று காங்கிரஸ் கூறியது. நாமும் சில சட்டத்தரணிகள் இருக்கின்றார்களே என்பதற்காக அந்த பொறுப்பை காங்கிரஸிடம் ஒப்படைத்தோம். ஆனால் இறுதி வரை அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இறுதி நேரத்தில், ’ஒன்றில் நீங்கள் எங்கள் கட்சியில் போட்டியிடுங்கள் அல்லது நாங்கள் உங்கள் கட்சிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்’ என்றார்கள்.
அந்த நேரத்தில் கூட்டமைப்பின் செல்வாக்கு கணிசமான அளவிற்குச் சரிந்திருந்த போதிலும் கூட்டமைப்பிற்கு எதிராகப் புதிதாகக் களமிறங்குகையில் ஒரு வலுவான கூட்டணியில் ஒரு பொதுவான சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு குறுகியகால இடைவெளியில் எமக்கு வேறு தெரிவுகளும் இருக்கவில்லை. எனவே, நாம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். 2001ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது விடுதலைப்புலிகளின் ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுச் சின்னத்தைப் பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டு இன்று எம்மீது பழிபோடுகின்றனர். மக்கள் நலனைக் கருதி அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றிணைவோம் என்ற நம்பிக்கையில் நாம் பல விடயங்களை வெளியில் சொல்லாமல் இருந்தோம். அவர்கள் தொடர்ந்தும் எம்மீது சேறுபூசும் நடவடிக்கைகளை மேற்கொள்வதால் அவர்களது நிலைக்கு இறங்கிவந்து நாமும் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. மக்கள் இவர்களைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்.
கேள்வி:- தமிழ்மக்கள் பேரவையின் அங்கத்துவ அரசியல் கட்சிகள், பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதா?
பதில்:- தமிழ்மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு மக்கள் அமைப்பு அங்கு பொதுச்சின்னம் பற்றி பேசுவது தொடர்பாக சந்தர்ப்பமும் இல்லை. அவ்வாறு பேசப்படவும் இல்லை. அவ்வாறான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எமக்குத் தெரியப்படுத்தவும் இல்லை அதற்கான அழைப்பும் எமக்கு விடுக்கப்படவில்லை. கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது எம்மையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சேர்ந்து ஒரு உடன்பாட்டுக்கு வரும்படி ஆலோசனை கூறினார்களே தவிர பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கூறவும் இல்லை ஆலோசனை வழங்கவும் இல்லை. தங்களை நியாயப்படுத்துவதற்குப் புதிதுபுதிதாக சில விடயங்களை கூறிவருகின்றார்கள். மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாதவர்கள் பொய்யான தகவலின் மூலம் தங்களை நியாயப் படுத்த முயற்சிக்கிறார்கள், அவ்வளவுதான்.
கேள்வி:- உள்ளூராட்சி தேர்தல் நடைபெறு வதற்கு முன்னதாக உங்கள் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் டில்லிக்கு அழைக்கப்பட்டரா?
பதில்:- அவர் இந்தியாவிற்குப் போயிருந்தார். அது உண்மை. இந்தியாவிற்குச் செல்வதற்கு இந்திய அரசாங்கத்தின் அழைப்பு அவசியமில்லை.
கேள்வி:- இந்தியா சென்று வந்ததன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சில தரப்புக்களை இணைத்துக்கொண்டு உள்ளூராட்சி தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட்டதற்கான காரணத்தை முன்னமேயே சொல்லி விட்டேன். இதற்கும் இந்தியா சென்றுவந்ததற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
கேள்வி:- உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் நீங்கள் தவிசாளர் பதவிக்காக பெரும்பான்மை கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தமை உட்பட தொடர்ச்சியாக உங்களுடைய கட்சி கொள்கை ரீதியான பற்றுறுதி இல்லாத நிலையில் செல்கின்றது என்ற விமர்சனத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- உள்ளூராட்சி சபை என்பது தமிழீழத்திற்கான தேர்தலும் அல்ல. அது அதற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அல்ல. முதலாவதாக காங்கிரஸ் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் பொறுப்பற்ற செயலின் காரணமாகவே ஒரு பொதுச்சின்னத்தை அடைய முடியாமல் போனது. அது நடைபெற்றிருந்தால் தமிழரசுக் கட்சி பெருமளவில் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும். அதற்கு தேர்தல் முடிவுகளே சாட்சி. கஜேந்திரகுமார் தனது தவறை மறைப்பதற்காகவே இத்தகைய கருத்துக்களைக் கூறிவருகிறார்.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அவர் டக்ளஸ் தேவானந்தாவிற்குத் தூது அனுப்பியது எந்தக் கொள்கையின் அடிப்படையில்? அவர் செய்தால் தூய்மைவாதம் ஏனையோர் செய்தால் கொள்கைப் பிறழ்வா?
கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரை பிரதேச சபைத் தலைவராக ஆதரவளித்தமையும் திருக்கோவில் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரை உப தவிசாளராக்க வாக்களித்தமையும் எந்த வகைக்குள் இணைப்பது? இன்று வரை அவர்கள்மீது தாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? கொள்கைச் சிங்கங்கள் இதற்கு பதிலளிப்பார்களா?
போராட்டமே அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றுவதற்காகத்தானே. தேர்தலில் நிற்பதும் ஆட்சி அமைப்பதற்காகத்தானே. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலம் அந்தந்த பிரதேசங்களின் தேவைகளை உணர்ந்து கிடைக்கக்கூடிய வரிப்பணத்தைக் கொண்டும் மத்திய அரசின் நிதியுதவியைக் கொண்டும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தின் அபிவிருத்தியைத் தேசியக் கட்சிகளின் கைகளில் கொடுப்பதன் மூலம் மக்கள் மேலும் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகும். இதனைக் கருத்தில் கொண்டே நாம் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டோம். வவுனியா நகரபிதாவுக்கான போட்டியில் மட்டுமே நாம் வெற்றிபெற்றோம்.
பாராளுமன்றத் தேர்தல் தவிர்ந்த ஏனைய தேர்தல்களில் போட்டியிட மாட்டோம் என்று தெரிவித்திருந்த கொள்கைப் பற்றாளர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிட்டதன் காரணம் என்ன? இது என்ன கொள்கைப் பற்று? ஒற்றையாட்சிக்குள் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தை ஏற்காதவர்கள் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட இருப் பதற்கான காரணம் என்ன? வடக்கின் முன்னாள் முதலமைச்சர், விக்னேஸ்வரனின் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னவர்கள் இன்று அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முண்டியடித்துச் செயற்படுவதன் நோக்கம் என்ன? இது எத்தகைய அரசியல் நேர்மை?
கேள்வி:- இந்தியாவின் முகவர்களாக ஈ.பி.ஆர்.எல்.எப்.செயற்படுகின்றதா?
பதில்:- யாருக்கும் முகவர்களாகச் செயற்பட வேண்டிய தேவை ஈ.பி.ஆர்.எல்.எப்பிற்குக் கிடையாது. எமது தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு நாம் இலங்கை அரசாங்கத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது. எமது நியாயமான கோரிக்கையை வென்றெடுப் பதற்கு சர்வதேச சக்திகளின் ஆதரவும் தேவை. உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எதிரிகளைக் குறைத்து நட்பு சக்திகளையும் ஆதரவு சக்திகளையும் அதிகரித்துக்கொள்வதே எமது கோரிக்கையை வென்றெடுப்பதற்கான சரியான பாதையாக அமையும்.
கேள்வி:- ஒற்றையாட்சிக்குள் மாகாண சபை முறைமையை அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- ஈழத் தமிழர்கள் பயங்கர வாதிகள் அல்ல என்பதையும், அவர் களின் தனிநாட்டுக் கோரிக்கை பயங்கரவாதக் கோரிக்கை அல்ல என்பதையும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமே தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதையும் அந்தத் தேசிய இனம் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் இலங்கை தேசத்தின் சம பங்காளிகளாகவும் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படுமானால் மாற்று யோசனை குறித்தும் சிந்திப் பதற்குத் தயாராய் இருக்கிறது என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காகவுமே மாகாண சபை முறைமையை அன்று நாம் ஏற்றுக் கொண்டோம்.
இதற்காக நாம் கொடுத்த விலைகள் அதிகம். அதிலும் குறிப்பாக அதற்கான தேர்தலை எதிர்கொண்டதிலிருந்து அதனை நிர்வகிப்பது வரை, நாம் எதிர்கொண்ட சவால்களும் தியாகங்களும் ஏராளம். அன்று ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவர்கள், அதனைக் கேலி செய்தவர்கள் இன்று மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அலைமோதுகின்றனர். ஒருவரைத் துரோகி பட்டம் கட்டுகின்றனர். தன்னைத் தவிர யாருமே கொள்கைப் பற்றாளர்கள் இல்லை என்று இறுமாப்படைகின்றனர். தியாகங்களைச் செய்தவர்கள் தொடர்ந்தும் போராடுகிறோம். பதவியை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் தூய்மை வேடம் போடுகின்றனர்.
மாகாணசபை முறைமை என்பது எமது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இல்லாவிட்டாலும் பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்தின் கீழ் அதற்குக் குறித் தொதுக்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதுடன், அதிலிருந்து நிரந்தரத் தீர்வை நோக்கி நகரவேண்டும். மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறமுடியாத வகையில் அரசியல் யாப்பில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
நேர்காணல்:- ஓமந்தை நிருபர்
பகிரவும்...