எவராக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் – ஜனாதிபதி

போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் இது இன்னும் உரிய முறையில் நடைமுறை ரீதியாக மக்கள் மத்தியில் அமுல்படுத்தப்படவில்லை. சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகள் ஒருபோதும் எவரும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகியிருக்கும் அனர்த்தங்களின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மத்தியில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக புதிய சர்வதேச ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

பாரிய சுற்றாடல் அழிவுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமை பற்றி அனைத்து மக்களும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது.

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமையான சுற்றாடலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டங்களுடன் தாமதிக்காது அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

அத்துடன், இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசங்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் நாட்டின் சுற்றாடல் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தும் மின்சார வாள்களை பயன்படுத்துவதற்கு அனுமதிப் பத்திரங்களை கட்டாயமாக்கிய முதலாவது அரசாங்கம் என்ற வகையில் அண்மையில் அது பற்றிய தீர்மானத்தை மேற்கொண்டமை சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற்கொண்டேயாகும்.

எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் மின்சார வாள்களை வைத்திருப்பவர்கள் அதுபற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, பிரதேச செயலகத்தின் ஊடாக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.

பொலிஸாருக்கும் கிராமிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து கள அலுவலர்களும் இது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதிப் பத்திரமின்றி இந்த மின்சார வாள்களை தம்வசம் வைத்திருந்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்குவது குறித்து விரைவில் வர்த்தமானி பத்திரம் மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த மின்சார வாள்களை நாட்டுக்கு கொண்டுவரும் வர்த்தக நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதுபற்றிய தீர்மானமொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !