எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது: மேத்யூ மில்லர்
பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நேற்று (செவ்வாய்) செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூ மில்லர், “உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் மோதல் ஏற்படும் புள்ளிகளில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எல்லைப் பதட்டங்களைக் குறைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இது தொடர்பாக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தோம். ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த தகவல்களை பெற்றுள்ளோம். அதேநேரத்தில், இந்தியா – சீனா இடையேயான இந்த தீர்மானத்தில் அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை” என தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான செயல்முறை முடிவடையும் தருவாயில் உள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பகுதிகளில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறுவதையும், உள்கட்டமைப்பை அகற்றுவதையும் இந்திய – சீன ராணுவங்கள் பரஸ்பரம் சரிபார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. எல்லை விவகாரங்களில் பரஸ்பர உடன்பாட்டைத் தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் எல்லைப் படையினர் படைகளை திரும்பப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், இந்த செயல்முறை சுமூகமாக முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.
லடாக்கில் 2020க்கு முன்பு இருந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதில் உறுதியாக இருந்த இந்தியா, இது தொடர்பாக சீனாவுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 21 ம் தேதி இரு நாடுகளுக்கு இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துருப்புகளை இருதரப்பும் விலக்கிக் கொள்வது என்றும், கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ரோந்துப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளாக நிலவி வந்த பதற்றத்துக்கு இந்த ஒப்பந்தம் மூலம் முடிவு கட்டப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 28ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ரஷ்யாவின் கசான் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நடத்திய பேச்சுவார்த்தை, இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டார். மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததில் ரஷ்யாவுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அவர் கூறினார். “இந்தியா மற்றும் சீனத் தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு கசானில் நடந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் இது மிகவும் சாதகமான முன்னேற்றமாகும். நான் புரிந்துகொண்ட வரையில், அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதில் நாங்கள் (ரஷ்யா) எந்தப் பங்கையும் வகிக்கவில்லை” என்று டெனிஸ் அலிபோவ் கூறி இருந்தார்.