எரிபொருள் விலை குறைப்பில் தலையிட தமிழக அரசிற்கு அதிகாரமில்லை: முதலமைச்சர்

எரிபொருள் விலை குறைப்பை மேற்கொள்ள மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெற்றோல், டீசலின் விலைகள் தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக சேலத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே தமிழக முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பெற்றோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். அவர்கள் தான் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.

இன்றைக்கு தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவையான நிதி ஆதாரத்தை பெருக்குவதுதான் மாநில அரசின் நிலை. அப்படி நிதியை பெருக்கினால்தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும். இருப்பினும் பெற்றோல், டீசல் விலை குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பெற்றோல் விலை லீற்றருக்கு 84.05 ரூபாயாகவும், டீசல் விலை லீற்றருக்கு 77.13 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு, இந்த விலையேற்றம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !