Main Menu

எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம்

தாயகத்தில் தனித்துவமாக உள்ள வளங்களை பயன்படுத்தி எமக்கான வளமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி திடசங்கற்படம் பூணவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்; செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோன வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் உலகளாவிய ரீதியில் தீவிரமாகியுள்ள நிலையில் அதன் பாதிப்புக்கள் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றாளர்களும், மரணங்களும் இலங்கையில் குறைவாக இருந்தாலும் அதனால் நாட்டின் ஒட்டுமொத்தமான  நிலைமையும் தலைகீழாக மாறியுள்ளது.சுகாதார பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஒரளவு நிலைமைகள் வழமைக்கு திரும்பினாலும், அன்றாட வாழ்வாதாரத்தினை நகர்த்திச் செல்வதில் பெரும் நெருக்கடியான நிலைமைகள் ஏற்படப்போகின்றமையை தவிர்க்க முடியாதவொரு சூழல் எழுந்துள்ளது.போரின் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் எமது மக்களை மாறிமாறி ஆட்சிப்பீடத்தில் இருந்த அரசுகள் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்திருந்தன என்பதை வெளிப்படையான விடயமாகின்றது.

எமது மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்துமே கண்துடைப்பான நாடகங்களாகவே இருக்கையில் எமது மக்கள் தமது சொந்த முயற்சியில் வாழ்வியலில் மீண்டெழ ஆரம்பித்திருந்தனர்.அவ்வாறான நிலையில்  உலகளாவிய தொற்றுநோயான கொரோனா மீண்டெழ ஆரம்பித்திருந்த எமது மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது.திறந்தபொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் அரசாங்கம் பின்பற்றிய இறக்குமதிகளை மட்டுமே மையப்படுத்திய பொருளாதாரத்தினால்; தற்போது பெரும் நெருக்கடிகள் எழுந்துள்ளதோடு சவால்கள் நிறைந்த எதிர்காலமொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தாயக பூமி, காடுகளையும், களனிகளையும், நீர்நிலைகள் உள்ளிட்ட வளங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது.இதனை நாம் அனைவரும் முதலில் மனதில் திடமாக நிறுத்திக்கொள்வதோடு உடனடியாக எமது வளங்களை மையப்படுத்தி எதிர்காலத்தினை திட்டமிடவேண்டிய கடப்பாட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பாக எமது பிரதேசத்தின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக ‘சுயதேவை பொருளாதார’ கொள்கைகளை மையப்படுத்திய திட்டங்களை உடன் பின்பற்றுவதே எமக்கும் எதிர்காலச் சந்ததியினரினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.விசேடமாக, நெல் உற்பத்தி, மரக்கறி உற்பத்தி, நன்னீர், கடல் நீர் மீன்பிடி ஆகியவற்றை ஊக்குவிப்பது இன்றியமையாததாகின்றது.

அதுமட்டுமன்றி, அனைத்து தரப்பினரும் தமது வீடுகளில் வீட்டுத்தோட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமானதொரு செயற்பாடாகின்றது.ஆகவே எமது மண்ணில் உள்ள வளங்களை சரியாக புரிந்து முறையாக பகிர்ந்து செயற்படுவதன் ஊடாக நாம் ஆட்சியாளர்களிடமோ, பிற தரப்பினர்களிடமோ தங்கி வாழும் சூழலிலிருந்து முற்றாக விடுபடுவதற்கான வழியை ஏற்படுத்துகின்றது.கொரோனாவினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கும் முகமாகவும் எமது எதிர்காலத்தினை நாமே வளமானதாக வகுத்துக்கொள்வதற்காகவும் தற்போதே தீர்க்கமாக முடிவெடுத்து  நடைமுறைச்சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகின்றது என்றார்.

பகிரவும்...