என்னை ஏமாற்றி விட்டாயே பாலு… கே.ஜே.யேசுதாஸ் வேதனை
முன்ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம் என பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு குறித்து பாடகரான கே.ஜே.யேசுதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாலுவும், நானும் ஒரு அம்மா வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், அவர் என் உடன்பிறந்தவர் போன்றவர்.
முன்ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். எஸ்.பி.பி முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய ஞானம் பெரிது, பாடல்களை உருவாக்கவும் செய்வார், பாடவும் செய்வார். எல்லோரிடமும் அன்பாக பழககூடியவர், யார் மனதையும் புண்படுத்தமாட்டார், நாங்கள் கடைசியாக இணைந்து பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் அவரை பார்க்கமுடியவில்லை, அந்த வருத்தம் எப்போதும் இருக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஜே.யேசுதாஸும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இணைந்து பாடிய பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளன.