என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை – ட்ரம்ப்
தன்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ‘ நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரஸை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத சூழ்நிலையில் முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் என பலர் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் உங்கள் விருப்ப ஜனாதிபதியான என்னை விட யாரும் அதிக தேசப்பற்றுமிக்கவர் இல்லை’ என பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வைரஸ் பரவியவர்களின் சுவாசக்காற்று மூலமாகவும் வைரஸ் பரவுவதால் முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அல்லது செய்தியாளர்களை சந்திக்கும் போதுகூட முகக்கவசம் அணிந்துகொள்ளவில்லை.
அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டபோதும் ட்ரம்ப் முகக்கவசம் அணியவில்லை.
இதன் பின்னர் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை அடுத்து கடந்த 12 ஆம் திகதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது ட்ரம்ப் முகக்கவசம் அணிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.