எனது வெற்றியை தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள்: தினகரன்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி. வி. தினகரன் எம்.எல்.ஏ. தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசி வருகிறார்.

நீலகிரி மாவட்டம் கோத்திகிரியில் இருந்து தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு திடீரென நேற்று இரவு வந்தார்.

அவரை அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். தினகரன் எம்.எல்.ஏ.வை கோவிலில் பார்த்ததும் கோவிலுக்கு வந்திருந்தவர்கள் அவரை நோக்கி கையசைத்தனர்.

அவரும் பதிலுக்கு கையசைத்தார். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டினர். தினகரனும் பக்தர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

பிறகு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.

ஏற்கனவே பண்ணாரி அம்மன் கோவிலுக்கு நான் வந்திருக்கிறேன். பண்ணாரி அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் என்றும் தெரியும். ஆகவே இங்கு வந்து தங்கத்தேர் இழுத்து அம்மனை வழிபட்டேன்.

இடைத்தேர்தலில் நான் பெற்ற வெற்றியை தமிழக மக்களே கொண்டாடுகிறார்கள். ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். நான் செல்லும் இடம் எல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்து என்னை வரவேற்று உற்சாகப்படுத்துகிறார்கள்.

மக்களின் ஆவலை பூர்த்தி செய்ய முழு நேர அரசியலில் ஈடுபடுவேன்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர். செல்வம் (ஈரோடு), முன்னாள் எம்.பி. சிவசாமி (திருப்பூர்) ஆகியோர் வந்திருந்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !