எதிர்கால சந்ததியை சிறந்த முன்னோடிகளாக மாற்ற வரலாற்று அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும்

எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
உயர் கல்வியை பெற்றாலும் நாட்டை நேசிக்கும் நாட்டின் மீது பற்றுடைய மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அபிமானமிக்க வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று (03) பிற்பகல் பொலன்னறுவை புராதன தொழிநுட்ப நூதனசாலை முன்பாக இடம்பெற்ற விழாவின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நவீன யுகத்திற்கு ஏற்றவாறு நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி பண்டைய கால மக்களின் தொழிநுட்பத்தை தற்போதைய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட புராதன தொழிநுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் இன்று முற்பகல் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. பல கலாசார அம்சங்களினால் நிகழ்வு வர்ணமயமாகியது.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த புதிய தொழிநுட்ப நூதனசாலையானது பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மாணவர்களுக்கு வரலாற்றை எடுத்துரைக்கும் முகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பிள்ளைகளை வல்லுனர்களாகவும் முன்னோடிகளாகவும் திகழவைக்க நினைக்கும் பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகளுக்கு நாட்டின் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் அதிநவீன தொழிநுட்பத்தை பயன்படுத்திவரும் எந்தவொரு நாட்டிற்கும் இலங்கையைப்போன்று அபிமானமிக்க வரலாறு இல்லை என்றும் எமது மூதாதையர்கள் மாபெரும் தொழிநுட்ப புரட்சிகளை மேற்கொண்ட சமயத்தில் அந்த நாடுகள் அடர்த்தியான காடுகளாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
எமது அபிமானமிக்க வரலாற்றை புதிய தொழிநுட்பத்துடன் உலகிற்கு எடுத்துரைக்க இந்த புராதன தொழிநுட்ப நூதனசாலை உதவியாக அமையும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளும் நூதனசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சனுஜா கஸ்தூரிஆரச்சி, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிறி சிறிசேன, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் அந்நிகழவில் கலந்துகொண்டனர்.