எஞ்சிய காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலை நாட்டுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளிப்பு
மறைந்த தமது தாயாரான எலிசபெத் மகாராணி, 7 தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசத்துடனும் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்தவரும் 70 ஆண்டுகளாக உலக அரங்கில் தலைசிறந்து விளங்கியவருமான எலிசபெத், கடந்த வியாழக்கிழமை 96வது வயதில் காலமானார்.
இந்தநிலையில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா, கனடா, ஜமைக்கா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 14 நாடுகளின் தலைவரான சார்ல்ஸ், கவலையுடன் உரையாற்றினார்.
அசைக்க முடியாத பக்தியுடன் செயற்பட்ட மகாராணியைப் போன்று தானும் எஞ்சிய காலம் முழுவதும் தேசத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளிப்பதாக சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தனது மூத்த மகன் வில்லியமை புதிய இளவரசராக நியமித்துள்ளதாகவும் சார்ல்ஸ் இதன்போது அறிவித்துள்ளார்.
இதேவேளை இன்று சனிக்கிழமையன்று செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெறும் நிகழ்வில் சார்ல்ஸ் உத்தியோகப்பூர்வமாக மன்னராக அறிவிக்கப்படவுள்ளார்.