எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண், மதுரை ராஜாஜி அரச வைத்தியசாலையில் பெண் குழுந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) பிறந்த குறித்த குழந்தைக்கு தனியான விசேட பிரிவில் வைத்து வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்றுடன் கூடிய இரத்தம் ஏற்றப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு, மதுரை அரச இராஜாஜி வைத்தியசாலையில், தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு நேற்று மாலை பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. ஜனவரி 30ஆம் திகதி குழந்தைப் பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று சுகப்பிரசவத்துடன் குழந்தைப் பிறந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அரச இராஜாஜி வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளதாவது,

“குறித்த குழந்தை 1.75 நிறையை கொண்டுள்ளது. சாதாரணமாக ஒரு குழந்தை 2.5 முதல் 3.5 வரை நிறை காணப்படும். ஆனால் இக்குழந்தையின் எடை குறைவாகவுள்ள போதும் ஆரோக்கியமாகவே உள்ளது.

இருப்பினும் எடை குறைவாக காணப்படுகின்றமையினால், அக்குழந்தைக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், எச்.ஐ.வி தொற்றாமல் இருப்பதற்கு வேண்டிய தடுப்பு மருந்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 45 நாட்களுக்கு பின்னரே எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படும்” என சண்முக சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !