எங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்

இன்னமும்
தாதி கழுவாத
இப்போதுதான்  பிறந்த
குழந்தைக்கு
பழைய சட்டை என்று
எதுவும் இல்லை!
மெல்லச் சிரிக்கும் கண்களால்
எந்த உலகை
புதிதாக்க வந்தாய்?
என் செல்லக்குட்டி!
அதை எப்படி ஆக்குகிறாய்?
என்  வெல்லக்கட்டி!

– கவிஞர் தேவதச்சன்

அம்மாவுக்கு பெண் குழந்தைகள் என்றால் அப்படி ஒரு ப்ரியமாம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது எனக்காக வளையல், கொலுசு எல்லாம் வாங்கிவைத்து காத்திருந்தாளாம். 1975-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி சென்னை யின் எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்தபோது, எக்மோர் அரசு மருத்துவமனையில் இருந்த அனைவரும் மொட்டை மாடிக்கு வந்து மிரண்ட கண்களால் வேடிக்கை பார்த்தனர். பிரசவத்திற்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அம்மா மட்டும் அப்போதுதான் பிறந்த என்னைப் பார்த்தாள். நான் ஆணாய்ப் பிறந்திருந்தேன்.

அடுத்த பிரசவத்தில் அம்மாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரண்டும் ஆண் பிள்ளைகள். பிறந்த சில நாட்களிலேயே அவை இறந்துவிட; அதற்கும் அடுத்த பிரசவத்தில் என் தம்பி நா. ரமேஷ் குமார் பிறந்தான். எஞ்சிய இரண்டுமே ஆண் பிள்ளைகள் என்பதால் அம்மா எனக்கு கூந்தல் வளர்த்தாள். என் சுருட்டைத் தலைமுடியை சீராக வாரி ரிப்பன் கட்டி பூச்சூட்டினாள். கன்னம் இரண்டிலும் பொட்டுவைத்து ‘கண்ணே முத்தே’ என்று கொஞ்சினாள்.

ஒரு மழைக்காலத்தில் நான் குறுகுறு கை நீட்டி தவழ்ந்தபடி வீட்டிற்கு அருகில் இருந்த குட்டையில் இறங்கி மூழ்கியபோது; எங்கெங்கோ என்னைத் தேடி கடைசியில் குட்டையின் மேலே தெரிந்த  என் சிவப்பு ரிப்பனை அடையாளம் கண்டு அம்மா என்னைக் காப்பாற்றினாள். அவள் பெண்போல் நினைத்து என்னை வளர்த்தாள். நான் பிழைத்தேன். எனக்கு உயிர் கொடுத்த அம்மா என் நான்காவது வயதில் செத்துப்போனாள்.

எங்கள் வீடு பெண் இல்லாத வீடானது. அப்பா வும் நானும் ஆண்களின் தனிமையை பகிர்ந்து கொண்டோம். நண்பர்கள் அவர்களின் அக்கா, தங்கைகளுடன் விளையாடும்போதெல்லாம் நான் தனிமையின் பள்ளத்தாக்கில் தத்தளிக்கும் குழந்தை யாவேன்.

அக்கா, தங்கைகள் இல்லாத வீடு அரைவீடு. அந்த வீட்டு முற்றத்தில் படரும் பவளமல்லிகள் கொடி யிலேயே பூத்து, கொடியிலேயே உதிர்கின்றன. மார்கழி வாசல் கோலங்களில் பூசணிப்பூக்களுக்கு பதில் வெறுமை குடியிருக்கிறது. காலிக்குழிக்கு அடுத்து புதையல் இல்லாத பல்லாங்குழியும்; ஊஞ்சல் ஆடாத நெல்லி மரமும்; கொலுசுக்கால் சத்தமிழந்த கிணற்றடியும்; ஈரத் தாவணி உலராத கொடிக்கயிறும்; அக்கா- தங்கைகளுடன் பிறக்காமல் ஆண்பிள்ளை கள் மட்டுமே வளரும் வீட்டை வெற்றிடமாக்கு கின்றன. எங்கள் வீடு வெற்றிடமானது.

இந்த அனுபவத்தில்தான் நான் பின்நாட்களில் “சில கேள்விகள்’ என்றொரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதை:

முதிர்ந்த மழை நாளில்
தொலைக்காட்சி பார்ப்பவளை
தேநீர் கேட்டதற்காய்
செல்லமாய்க் கோபிக்கும்
சிணுங்கலை  ரசித்ததுண்டா  நீ?

கூடப்படிக்கும்
கிராமத்துத் தோழியிடம்
என் அண்ணனுக்கு
ரொம்பப் பிடிக்குமென்று
ஜாமெண்ட்ரி பாக்ஸ் நிறைய
நாவல்பழம் வாங்கிவந்து
மண் உதிரா பழத்தை
ஊதித்தரும் அன்பில்
உணர்ச்சி வசப்பட்டதுண்டா நீ?

“என் அண்ணன்’ என்றவள்
சகதோழிகளிடம் அறிமுகப்படுத்துகையில்
வெட்கத்தால் மௌனித்து
தலைகுனிந்திருக்கிறாயா?

தென்னங் கீற்றுக்குள்
சடங்கான வெட்கத்தில்
அவள் கன்னம் சிவக்கையிலே
உனக்கும் அவளுக்கும்
இடையில் தோன்றிய
நுண்ணிய இழைகளை
அறுத்ததுண்டா நீ?

“கிளிப்பச்சை’ என்றவள்
ஆயிரம் முறை கூறியும்
பாசிகலரில் வளையல் வாங்கிவந்து
வசைப்பட்டிருக்கிறாயா?

மிகச்சாதாரணமாய்
கேட்டுவிட்டாய் நண்பா.
“உனக்கென்ன அக்காவா, தங்கையா?
கஷ்டப்பட்டு சம்பாதித்து
கல்யாணம் பண்ணித்தர
ஒரே பையன்’ என்று.

எனில்,
கஷ்டப்பட்டு சம்பாதித்து
கல்யாணம் பண்ணித்தர மட்டுமா
அக்காவும்  தங்கையும்?

அம்மா இறந்து ஆறு வருடங் கள் கழித்து உறவினர்களின் வற்புறுத்தலால் அப்பா இரண்டா வது திருமணம் செய்துகொண் டார். சித்திக்கு பிறந்த இரண்டும் ஆண் குழந்தைகள். உறவினர்கள் ஒன்றுகூடுகிற விசேஷங்களில் அப்பா சொல்வார், “”எனக்கு ஆறு குழந்தைங்க பொறந்து நாலு மட்டும் தங்குச்சு. நாலுமே ஆம்ப ளப் பசங்க. எங்க முத்துவுக்காவுது பொம்பள குழந்தை பொறந்து அத நான் தூக்கிக்கொஞ்சணும்!” அப்பாவுக்கும் பெண் குழந்தை மேல் ஆசை இருந்ததை அப்போது தான் நாங்கள் அறிந்தோம்.

எனக்குத் திருமணமாகி ஆண் குழந்தை பிறந்தபோது மடியில் தூக்கிவைத்தபடி  அப்பா  சொன் னார். “”பேத்தி பொறப்பான்னு எதிர்பார்த்தேன். பரவாயில்ல; சிங்கக்குட்டி பொறந்திருக்கு!” அடுத்து பிறக்கப்போகும் பேத்தி யைப் பார்க்காமலேயே மூன்று மாதங்களில் அப்பா இறந்து போனார்.

வருடங்கள் கடந்து நண்பன் ராம் அவன் இயக்கிக்கொண்டி ருந்த “தங்கமீன்கள்’ படத்திற்காக அப்பா, மகள் உறவைப் பற்றி பாடல் எழுத வேண்டும் என்று என்னை அழைத்தபோது எனக் குள் மேற்சொன்ன  சம்பவங்கள் எல்லாம் நிழலாடின.

என் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்தப் பாடலை அம்மா எழுதினாள்; அப்பா எழுதினார்; நான் கருவியாக இருந்தேன். இப்படித்தான் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்!’ பாடல் பிறந்தது. பாடல் வெளி வந்தவுடன் முதல் தொலைபேசி அண்ணன் நக்கீரன் கோபாலிடமி ருந்து வந்தது. “”தம்பி, இப்பதான் என் மகள் இந்தப் பாட்டைக் கேளுங்கன்னு ஒரு பாட்டை கொடுத்தாங்க… அப்புறம்தான் தெரிஞ்சது அது நீங்க எழுதுனதுன்னு… வாழ்த்துகள் தம்பி!” என்றார்.

“”எதுக்குண்ணே” என்றேன்.

“”தேசிய  விருதுக்கு” என்றார்.

அவர் வாக்கு பலித்தது. அந்தப்  பாடல் தேசிய விருதை எனக்குப் பெற்றுத் தந்தது. அதையும் தாண்டி பல தந்தைகளின், மகள் களின் கண்ணீர்த்துளிகள் இன்று வரை என் கைகளை நனைத்துக் கொண்டே இருக்கின்றன.

“”உம் பாட்டை கேட்டபிறகு நான் ஒரு பெண் குழந்தை பெத்திருக்கலாம்னு தோணுதுடா” என்று தொலைபேசியில் வாழ்த் திய ஆசான் பாலுமகேந்திரா தொடங்கி; அமெரிக்காவில், நியூஜெர்சியில் ஒரு தமிழ் அசைவ உணவகத்தில் குடும்பத்துடன் சென்றபோது, அந்த உணவகத்தின் உரிமையாளரான பெண்மணி தன் கைகளாலேயே எங்களுக்கு பரிமாறி, அவரே சமைத்த பாயசத் தைக் கொடுத்து, “”இது ஆனந்த யாழுக்காக” என்றபோது நான் நெகிழ்வின்  உச்சத்தை அடைந் தேன்.

சென்ற வருடம் என் மனைவி ஜீவலட்சுமி மீண்டும் கர்ப்பமா னாள். பெண் குழந்தைதான் வேண்டும் என்று நாங்கள் காத்திருந்தோம். மகன் ஆதவன் நாகராஜன் குழந்தைக்கான பெயரை  தேர்வுசெய்தான். ஆணா கப் பிறந்தால் மாதவன் நாகராஜன். பெண்ணாகப் பிறந்தால் மகாலட்சுமி. ஏனெனில் அவன் பாட்டியின் பெயர் சிவலட்சுமி, அம்மா பெயர் ஜீவலட்சுமி, ஆகையால் மகாலட்சுமி.

என் மனைவிக்கு முதல் பிரச வம் பார்த்தவர் சாலிகிராமத்தில் இருந்த மருத்துவர் வசந்தமாலா. இரண்டாவது பேறு காலத்திலும் அவர்தான் பார்த்துக்கொண்டி ருந்தார். நாங்கள் இப்போது அண்ணா நகருக்கு வந்துவிட்ட தால், “”வலி ரொம்ப அதிகமானா பக்கத்துல இருக்குற ஆஸ்பிட் டல்ல அட்மிட் ஆயிடுங்கள்” என்று அவர் சொன்னதாக மனைவி தெரிவித்தாள்.

ஒருநாள் வலி அதிகமாக, வீட்டிற்கு அருகிலிருந்த மருத்து வர் தமிழ்ச் செல்வியிடம் மனைவி சென்றிருக்கிறார். நள்ளிரவு நான் வீட்டிற்கு வந்ததும் என்னிடம் சொன்னாள். “”அவங்க அப்பா பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மா. கி. தசரத னாம். உங்களைப் பத்தி சொன்ன தும் இதைச் சொன்னாங்க!”

நான் மனைவியிடம் சொன் னேன். “”பேராசிரியர் மா.கி. தசரதனார் பற்றி  நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஒரு தமிழ்ப் பேராசிரியர் மகள் மருத்து வம் பார்த்து என் மகள் பிறக்கி றது எனக்கு சந்தோஷம். எந்த பயமும் இல்லாம இவங்ககிட் டேயே  மருத்துவம் பாரு. தமிழ்ப் பேராசிரியர்கள் தங்கள் பிள்ளை களை சரியாகத்தான் வளர்த்திருப் பாங்க!”

சென்ற பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.52 மணிக்கு என் மனைவிக்கு  மகாலட்சுமி  பிறந்தாள். பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்கும் ஆண்களின் வலி; பத்து மாதம் சுமக்கும் பெண்களின் வலியைவிட பெரியது என்பதை நான் உணர்ந்த தருணம்  அது.

என் கண்ணெதிரே என் உருவம்; என் உயிர்; என் உடல் கைநீட்டி அழைப்பதை நான் பார்த்தேன். தாயாகி வந்த மகளை இரு கைகளால் தழுவிக் கொண்டேன். அதுவரை பாதி மனிதனாக இருந்தவன் மகள் பிறந்ததும் முழு மனிதனானேன்.

காலை ஏழு மணிக்கு மயக்கம் தெளிந்ததும் மனைவி சொன் னாள் “”அரை மயக்கத்துல டாக்டர் கிட்ட என்ன குழந்தைன்னு கேட்டேங்க… “ஆனந்த யாழ்’ பிறந்திருக்குன்னு சொன்னாங்க!’ நான் என் ஆனந்த யாழை தழுவிக் கொண்டேன்.”

என் வளர்ச்சியில் அன்பும், அக்கறையும் கொண்ட நக்கீரன் கோபால் அண்ணன், அறிவுமதி அண்ணன், சீமான் அண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் சொன்னேன். மாலை ஆறு மணிக்கு கோபால் அண்ணனிட மிருந்து அலைபேசி ஒலித்தது.

“”தம்பி. அண்ணா நகர்ல எந்த மருத்துவமனை?” அப்போது நான், தம்பி ஜீ.வி. பிரகாஷ்குமார் ஸ்டூடியோவில் பாடல் எழுதிக் கொண்டிருந்தேன். “”அண்ணே  நான் வெளில இருக்கேன்… நாளைக்கு வர்றீங்களா?”

“”தம்பி நான்  உங்கள  பார்க்க வரல, பாப்பாவைத்தான் பார்க்க வர்றேன். பெண் குழந்தைன்னா எங்க குடும்பத்துல உடனே போய்ப்  பார்த்திடுவோம். அண்ணியும் கூட இருக்காங்க!” என்றார்.

“உலகை ஆளப்பிறந்த எங்கள் குட்டி இளவரசிக்கு’ என்று அண்ணனும், அண்ணியும் கையெழுத்திட்டிருந்த வாழ்த்து அட்டையை இப்போதும் என் கையில் வைத்திருக்கிறேன்.

எங்கள் குட்டி இளவரசி தினமும் எங்கள் வீட்டை விருந்தி னர் வீடாக மாற்றிக்கொண்டி ருக்கிறாள். எழுத்தாளர்கள் பாமரன், பவா செல்லதுரை தொடங்கி; வீடு தேடிவந்து தங்கள் மகன்கள் நடிக்கும் படத்திற்காக பாடல் எழுதவந்து என் தேவ தையை ஆசீர்வதித்த நடிகர்கள் டெல்லி கணேஷ், எஸ்.வி. சேகர் எனத் தொடர்ந்து தினந்தோறும் பல இயக்குநர்களையும், இசை யமைப்பாளர்களையும்; நடிகர் களையும்; தன்னை வாழ்த்த அழைத் துக்கொண்டே இருக்கிறாள்.

மகள் பிறந்ததும் மகன் எங் களை விட்டு விலகிவிடுவானோ என்ற பயம் அடிமனதில் இருந்து கொண்டே இருந்தது. என் மகளுக்காக முதல் நகையை நான்தான் அணிவிக்கவேண்டும் என்று ஒரு நகைக்கடையில் செயின் வாங்கினேன். புறப்படும் போதுதான் ஞாபகம் வந்தது. மகனும் மருத்துவமனையில் இருக்கிறான். அவன் மனது புண்படக்கூடாதென்று மீண்டும் நகைக்கடைக்குள் நுழைந்து மகனுக்காக இன்னொரு செயினை வாங்கினேன்.

மருத்துவமனையை அடைந் ததும் மகளுக்காக வாங்கிய செயினை வெளியே எடுத்தேன். மகன் அதைப் பார்த்ததும் பரசவ மாகி, “”என் தங்கச்சிக்கு என் கையால நான்தான் இந்த செயினை போடுவேன்!” என்று வாங்கிக்கொண்டான். தன் தங்கைக்கு அந்த நகையை அவன் அணிவித்ததும், “”திரும்புடா ராஜா” என்று சொல்லி அவன் கழுத்தில் அவனுக்காக வாங்கிய செயினை நான் அணிவித்தேன். பிள்ளை கண்கலங்கி என் கழுத் தைக் கட்டிக்கொண்டான். அந்தத் தருணத்தில் நான் மீண்டும் தகப்பனானேன்.

“”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என்று பாரதி வந்து என் காதுக்குள் பாடிக்கொண்டிருந் தார்.

மகாலட்சுமி தன் பிஞ்சுக்கால் களால் எட்டி உதைத்து என் தவறுகளை திருத்திக்கொண்டிருக் கிறாள். தன் பிஞ்சுக் கைகளால் மீண்டும் அணைத்து என்னை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறாள். இவ்விதமாக எங்கள் வீட்டில் தன் ஆனந்த யாழை மீட்டிக்கொண்டி ருக்கிறாள். அவள் கண்களில் நான் என் அம்மாவைப்  பார்க்கிறேன்; அப்பாவைப் பார்க்கிறேன்; அவர்கள் விரும்பிய பெண் குழந்தையைப் பார்க்கிறேன்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !