எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது – இலங்கை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் தம்பதியினர்
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் தங்களது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க்கைச் சேர்ந்த கோடிஸ்வர தம்பதியினர் உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள்மீது ஐஸ் பயங்கரவாத குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இதில் டென்மார்க்கைச் சேர்ந்த பெரிய கோடீஸ்வரத் தொழிலதிபர் ஆண்டர்ஸ் ஹோல்ச் மற்றும் அன்னி தம்பதிகளின் மூன்று பிள்ளைகளான அல்மா (15), அக்னீஸ் (12) மற்றும் அல்பிரட் (5) ஆகிய மூவரும் உள்ளடக்கம்.
இந்நிலையில் பிள்ளைகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் தங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறி மனதை தேற்றியவர்களுக்கு ஆண்டர்ஸ் – அன்னி தம்பதி நன்றி கூறி உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதில், எங்கள் மூன்று பிள்ளைகளை இழந்த பின்னர் எங்களுக்கு கிடைத்த இரங்கல்கள், அனுதாபங்கள் மற்றும் மனதைத் தேற்றும் வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் எங்களின் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.
எங்கள் மூன்று குழந்தைகளின் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும்’ என தெரிவித்துள்ளனர்.