ஊழல் பேர்வழிகளை ஒழித்துக் கட்ட நேரம் வந்து விட்டது – கமல்ஹாசன்
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தேர்தல் பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ள கமல், தொழில் வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “பல நுாற்றாண்டுகள் பழமையான சரித்திர புகழ் பெற்றது மதுரை. 1919ல் காந்தி, ரவுலட் சட்டத்தை எதிர்த்து இளைஞர்களை திரட்டியபோது இந்த மதுரை அவருக்கு கை கொடுத்தது. அவருடைய ஆடையை மாற்றியது மதுரை விவசாயி.
அரை நுாற்றாண்டுகளாக மதுரையின் கலாசாரம் அழிந்து விட்டது. மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றிக்காட்ட வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு. அவரது கனவின் தொடர்ச்சி நான்.
அவருடைய கனவை நிகழ்த்தி காட்டாமல் உறங்கி கொண்டிருக்கும் ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டது.அரசியல் இளைஞர்களை பாதித்துவிட்டது. அதற்கு பதில் கொடுக்க அரசியலில் இளைஞர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதற்காக இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். வரும் ஜனவரியில் காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடக்கும். மே மாதம் – தேர்தலில் – கயவர்களுடன் மல்லுக்கட்டுவோம். அதற்கு நாம் தயாராக வேண்டும். 37 ஆண்டுகள் நற்பணி செய்தால் போதும் என நினைத்தேன். ஆனால் என்னை அவ்வாறு வாழ விடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...