ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் வடக்கில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலை மோதிய மக்கள்!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுக்கடுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்து. இந்நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளில் திரண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலையில் மக்கள் நகரங்களில் அலைமோதினர்.
அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலைமோதினர்.
மாவட்டத்திலுள்ள அனைத்துச் சந்தைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மக்கள் குவிந்ததுடன் பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், மருந்தகங்களில் பொலிஸாரின் அறிவுறுத்தலில் ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையில் மக்கள் காத்திருந்து கொருட்களை கொள்வனவு செய்தனர்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பலசரக்குக் கடைகள், சந்தைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியவசியத் தேவைகளுக்கான இடங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.
இதன்போது, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
வருகைதரும் மக்களுக்கிடையே சுகாதார இடைவெளிகளைப் பேணும் வகையில் அவர்கள் தமது கடமைகளைச் செய்திருந்தனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலும் பெருமளவான மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். கிளிநொச்சி சேவைச் சந்தையில் மக்கள் நெரிசல் அதிகமாகக் காணப்பட்டதுடன் மரக்கறி உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டிய மக்கள் கொரோனா தொற்று பாதுகாப்பிற்காக நெருக்கத்திலிருந்து விலகி நிற்பதற்கான சூழல் இன்று குறித்த பகுதியில் காணப்படவில்லை.
இதேவேளை, வங்கிச் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் இருந்ததுடன் குறித்த சேவையை பெற்றுக்கொள்வதற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அத்துடன், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக சதொச மற்றம் வர்த்தக நிலையங்களில் முறையான அணுகுமுறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மன்னார் மாவட்டத்திலும் சுமார் மூன்று நாட்களின் பின்னர் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் மக்கள் தமது அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய நகரங்களில் திரண்டிருந்தனர்.
காலை 6 மணி முதல் மன்னார் சதொச விற்பனை நிலையத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவுக் செய்தனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிருஷாந்தன் தலைமையில் பொலிஸார் மன்னார் பகுதியில் விசேட சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும், வவுனியா நகர்ப் பகுதியில் மக்கள் அதிகளவில் வருகைதந்து பொருட் கொள்வனவில் இடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.
நகர்ப் பகுதியில் பல்பொருள் விற்பனை நிலையம், மரக்கறி விற்பனை நிலையம், மருந்தகங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் மக்கள் நெரிசலைத் தடுக்க அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு மக்களை சீர்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.