உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் 5 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – முதலமைச்சர்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 5 இலட்சம் பேருக்கு வேலைபாய்ப்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்மாநாட்டில் 3.42 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றன. இதில் தலைமைதாங்கி உரையாற்றியபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இம்மாநாட்டின் மூலம் சுமார் 5 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டை விட மேலதிகமாக 1 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அடுத்த உலக முதலீட்டாளர் மாநாடு 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !