உலக மக்கள் தொகை நாள் – 2200ம் ஆண்டு உலக மக்கள்தொகை எவ்வளவு இருக்கும் தெரியுமா?
உலக மக்கள்தொகை நாள் (World Population Day) ஜூலை 11. ஆண்டுதோறும் இந்த நாளில் மக்கள் தொகைக்கான விழிப்புஉணர்வை உலகளாவிய ரீதியில் எடுத்துக்கூறும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. கிபி 1650-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்கள் தொகை சரசர வென்று உயர்ந்துகொண்டே சென்றது. இதுதான் உலக மக்கள்தொகை அதிகரிப்பதன் முதல் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. 1840-ல் மக்கள்தொகை 100 கோடியாகவும், 1927-ல் மக்கள்தொகை 200 கோடியாகவும் உயர்ந்து, பின்னர், 1960-ல் 300 கோடி மக்கள்தொகையினை சுமார் 39 ஆண்டுகளில் எட்டியிருந்ததுடன், 1999-ஆம் ஆண்டில் மக்கள்தொகை 600 கோடியை அடைந்திருந்தது.
இப்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு கோடி என்ற வீதத்தில் அதிகரித்து 1987-ஆம் ஆண்டு இதே நாளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெளியிடும்போதுதான், உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது பரவலாகப் பேசப்பட்டது. மனிதன் தோன்றிய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிக நீண்ட காலம். அதன் பிறகு மக்கள்தொகை விஸ்வரூபம் எடுத்து, 100 கோடி, இன்று 750 கோடியாக (7.5 பில்லியன்) ஆக இருக்கிறது. 2024-ஆம் ஆண்டில் மக்கள்தொகை 800 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு விநாடிக்கு 2,582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 2,23,098 வீதமாகவும், இரு வருடத்திற்கு 8,14,30,910 என்ற தொகையாகவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்யோப்பியா மற்றும் வங்காளதேசம் உள்ளன என்று ஐநா மக்கள்தொகை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள்தொகை பெருக்கத்துக்கு முக்கியக் காரணம் மருத்துவத்தில் நிகழ்ந்த பல்வேறு புரட்சியும் வியத்தகு வளர்ச்சியும்தான். மனித இனம் கூட்டம் கூட்டமாக அழிந்ததற்கு எப்படி போர் காரணங்களாக அமைந்ததோ, அதேபோல் பரவும் நோய்களும் காரணங்களாக அமைந்தன. காலரா, பிளேக் மற்றும் மலேரியா போன்ற நோய்களினாலும் மனித இனம் வெகுவாக வீழ்ந்தது. இதைத் தடுக்கும் வண்ணம் ஏற்பட்ட 20-ஆம் நூற்றாண்டின் மருத்துவப் புரட்சி பல மாற்றங்களை நிகழ்த்தி நோய்களின் வீரியத்தை குறைத்து மனிதனின் ஆயுளை நீடித்தது.
1950-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி ஆண்களின் சராசரி ஆயுள் 48 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுள் 38 வயதாகவும் இருந்தது. 2001-ல் ஆண்களுக்கு 63 ஆகவும், பெண்களுக்கு 65 ஆக உயர்ந்தது. இதையடுத்து, 2010-ல் ஆண் பெண் இருவரின் சராசரி ஆயுட்காலமும் 75 ஆக உயர்ந்துள்ளது.
இதே வேகத்தில் நாம் பயணித்தால், 2050-ஆம் ஆண்டில் 1000 கோடியாக மக்கள்தொகை உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் ஒரு உச்சம் இருப்பது போல் மக்கள் தொகை உயர்வுக்கும் இருக்கும் உச்சபட்சத் தொகை 1200 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த மக்கள்தொகையைத்தான் பூமி தாக்குப்பிடிக்க இயலும். இதன் பின்னர் மக்கள்தொகை அதிகரித்தால், அழிவுப் படிநிலையின் இறுதி நிலையை எட்டுவோம் என்று கூறப்படுகின்றது. அதாவது, மக்கள்தொகை அதிகரிப்பில் தொடங்கி உலக வெப்பமயமாதல் வரை மனித இனம் பல்வேறு அழிவுகளைச் சந்திக்கும். இன்னும் ஆறு டிகிரி வெப்பம் பூமியில் அதிகரித்தால், மனித இனம் பூண்டோடு அழிந்து போகும் நிலையும் கட்டாயம் ஏற்படும் என்று சமூக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
என்னதான் சமூக ஆர்வலர்கள் தொண்டைத்தண்ணி வற்றக் கத்தினாலும், விழிப்புஉணர்வை ஏற்படுத்தியத்தினாலும் மனிதனின் கனிம வளங்களையும் சுரண்டி எடுத்துவிட்டான். இந்தப் பூமி தாங்கக் கூடிய அதிகபட்ச கார்பனின் அளவு ஒரு லட்சம் டன். ஆனால், இப்போதே கார்பனின் அளவு அரை லட்சம் டன்னைத் தாண்டிவிட்டது. எனவே 2200-ல் உலக அழிவு நிச்சயம் என்று பதறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அது கார்பன் வெளியேற்றத்தினாலா அல்லது மக்கத்தொகையினாலா என்பதுதான் கேள்விக்குறி.
ஆனால் எதிர்பாரா விதமாக மற்றொரு அபாயமும் இந்தியாவுக்குக் காத்திருக்கிறது…!
குளிர்ப்பிரதேசங்களில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளுள் ஒன்று, ‘இந்தியாவுக்கு டூர் போட்டுவாருங்களேன். வரும் போது கண்டிப்பா நல்ல செய்தி காதுல விழும்’ என்பதுதான். அது வேறொன்றுமில்லை தம்பதிகள் ஹனிமூனுக்காக இந்தியா வந்தால், குழந்தைப் பேறு உண்டாகும் என்பதுதான். இது வெறும் நம்பிக்கையோ, பழக்கமோ அல்ல, மருத்துவ ரீதியில் உண்மையும் கூட. இந்திய நாட்டின் வெப்பநிலை, வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் அனைத்துமே வாழ்வதற்கு மிகவும் ஏற்றது. இதன் காரணமாக கருத்தரிப்பு இங்கு விரைவில் ஏற்படுகிறது. இந்தியா மட்டுமல்ல இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் கருத்தரிப்பதற்கான இதே காரணங்கள் உள்ளன. இந்தியா சுற்றுலாவில் கொஞ்சம் ‘சீப் அண்ட் பெஸ்ட்’ என்பதனாலும், அனேக இடங்கள் வரலாற்று சிறப்பை பெற்றிருப்பதாலும் பரவலாக விரும்பப்படுகிறது.
இதனால்தான் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் மக்கள்தொகை பெருக்கமும், அபாயமும் அதிகம். உலகமே மக்கள் தொகை அதிகரிப்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் அது தவறு. அமெரிக்காவிலும், கனடாவிலும் இப்போது இருக்கும் மக்கள்தொகையே 2050 வரையிலும் நீடிக்கும். பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷியாவில் 12% மக்கள்தொகை குறையும். உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா வெறும் 2.6 சதவீதத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. ஆனால், உலக மக்கள்தொகையில் 16 சதவீதத்தை தன்னுள் கொண்டுள்ளது. மக்கள் அடர்த்தியும் இங்குதான் அதிகம். இந்தியாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 387 பேரும், தமிழ்நாட்டில் 555 பேரும், அதுவே சென்னையில் என்றால் 27,000 பேரும் வசிக்கின்றனர்.
இப்போதே மருத்துவம், சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றின் பற்றாக்குறைக்கான பதிலை இந்திய அரசால் கொடுக்க இயலவில்லை. சர்வதேச வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 45.6 கோடி. அதாவது இவர்களின் ஒருநாள் சராசரி வருமானம் சுமார் 1.25 அமெரிக்க டாலர் கூட இல்லை. கிட்டத்தட்ட உலகில் 33% ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர். உலகின் மூன்று ஏழைகளில் ஒருவர் இந்தியர். 18-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதகுருவான டி.ஆர் மால்தஸ் என்பவர் “அதிகரிக்கின்ற மக்கள் தொகையினால் உணவின்றி அவதிப்படும் நிலை ஏற்படும்” என்று சொன்னது இன்று உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நாடுகள் பலவற்றால் நினைவு கூறப்பட்டு வருகிறது.