உலக நீச்சல் போட்டியில் நான்கு இலங்கையர்கள் பங்கேற்பு!

உலக நீச்சல் போட்டியில் நான்கு இலங்கையர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

14ஆவது FINA உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவின் ஹெங்ஷோ (Hangzhou) நகரில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை சார்பாக சிரன்த த டி சில்வா, கைல் அபேசிங்க, சது சாவின்தி ஜயவீர மற்றும் திமலி பண்டார ஆகிய நான்கு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தோனேஷியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4X100 சாதாரண நீச்சல் போட்டியில் இலங்கை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற சிரன்த த டி சில்வா மற்றும் கைல் அபேசிங்க ஆகிய வீரர்கள் 2ஆவது தடவையாக உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிற்காக தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், இவ்விரண்டு வீரர்களும் வெளிநாட்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதில் 100 மீற்றர் சாதாரண நீச்சல், 200 மீற்றர் சாதாரண நீச்சல் மற்றும் 100 மீற்றர் மெட்லி நீச்சல் ஆகியவற்றில் தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ள கைல் அபேசிங்க, இறுதியாக 2016இல் கனடாவில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

அத்துடன், 100 மற்றும் 200 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டிகளில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரான சிரன்த த டி சில்வா, 2014ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற 12ஆவது உலக நீச்சல் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றியிருந்தார்.

இதேநேரம், கொழும்பு விஷாகா கல்லூரியைச் சேர்ந்த சது சாவின்தி ஜயவீர மற்றும் லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த திமலி பண்டார ஆகியோர் இளவயது வீராங்கனைகளாக இப்போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !