உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் பிரித்தானிய நீச்சல் வீரர்!

பிரித்தானிய கடலில் சுமார் 2000 மைல் தூரத்திற்கு நீந்தி, உலக சாதனை ஒன்றினை முறியடிக்கும் முயற்சியில் நீச்சல் வீரர் ரோஸ் எட்ஜ்லி ஈடுபட்டுள்ளார்.
பிரித்தானியாவை சுற்றி சுமார் 2000 மைல் தூர பயணத்தை ஜூன் முதலாம் திகதி ஆரம்பித்த எட்ஜ்லி நேற்று(செவ்வாய்கிழமை) திகதி 900 மைல் தூரத்தை நிறைவு செய்திருந்தார்.
இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு அத்லான்டிக் குறுக்காக 73 நாட்கள் நீந்தி சாதனை படைத்த பெனாய்ட் லுகொம்ட்டின் சாதனையை ரோஸ் எட்ஜ்லி முறியடித்துள்ளதாக அவருடைய குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சாதனை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்துரைக்கும் எட்ஜ்லி, புதிய சாதனையை உருவாக்குவது உற்சாகமாக இருக்கிறது. ஆனால் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்கிறார்.
ஆறுமணிநேரம் கடலில் நீந்தியும் ஆறு மணிநேரம் படகின் உதவியுடன் ஓய்வெடுத்தும் நீந்திக் கொண்டிருக்கும் எட்ஜ்லி தனது சவாலை நிறைவு செய்த பின்னரே கரைதிரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.