உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் – இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
லண்டனில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5-ந் தேதி நடக்கிறது.
முன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. லண்டனில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக பயிற்சி ஆட்டம் முக்கியம் என்பதால் இரு அணிகளும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும். இந்திய அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும். இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி உண்டு.
சவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.