உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்
சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு சரிவு ஏற்ப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம் உற்பத்தியாளர்களுக்கு முற்றிலும் முரணாக மாறியது.
சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவதை தவிர்த்தனர். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விற்பனை சரிவை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. ஆப்பிள் நிறுவனமும் ஐபோனின் விலையை மாற்றியமைத்தது.
தற்சமயம் கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 2018 ஆம் ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கடந்த ஆண்டு உலக மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய ஸ்மார்ட்போன்கள் எவை என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு உலக மக்கள் வாங்கிய ஸ்மார்ட்போன்களில் ஐபோன் X முதலிடம் பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் 7 அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இவை தவிர ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களும் உலக டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களில் ஆறு மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சியோமி ரெட்மி 5ஏ இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்9, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.
சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி சீனாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் விவரங்களையும் கவுன்ட்டர்பாயிண்ட் வெளியிட்டிருக்கிறது. சீனாவில் ஒப்போ ஆர்15, ஐபோன் X மற்றும் ஒப்போ ஏ5 முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன.