உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட ரஷ்ய- வடகொரிய இணைய ஊடுருவிகள் முயற்சி!
உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட ரஷ்ய- வடகொரிய அரசாங்க ஆதரவு இணைய ஊடுருவிகள் முயற்சிப்பதாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த இணைய ஊடுருவல் முயற்சியில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளது.
ஆனால், எத்தனை முயற்சிகள் வெற்றி பெற்றது அல்லது அத்துமீறல்களின் தீவிரத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
பெரும்பாலான அத்துமீறல்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும், இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் நடந்துள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கணினி அமைப்புகளில், ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவ முயற்சித்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது,
இதனிடையே முதன் முறையாக, சீனா, ரஷ்யா, வட கொரியாவைச் சேர்ந்த கணினி இணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.