உலகம் முழுவதும் பெரும் மனித அழிவு- ஒரு மில்லியனை கடந்தன கொரோனா மரணங்கள்!
உலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு மில்லியனைக் கடந்துள்ளன.
இதன்படி, இதுவரையான உயிரிழப்புக்கள் பத்து இலட்சத்து 202ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை மூன்று கோடியே 31 இலட்சத்து 77 ஆயிரத்து 413 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இதுவரை இரண்டு கோடியே 45 இலட்சத்து நான்காயிரத்து 931 பேர் தொற்றிலிருந்து இதுவரை மீண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் நாடாக பதிவாகியுள்ளதுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேஸில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அத்துடன், இந்த வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகளிலும் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் பெருந்தொற்றினால் அமெரிக்காவில், இதுவரை 72 இலட்சத்து 94 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. அத்துடன், அந்நாட்டில் மட்டும் இதுவரை இரண்டு இலட்சத்து ஒன்பதாயிரத்து 236 பேர் மரணித்துள்ளனர்.
இதையடுத்து இந்தியாவில் அதிதீவிரமாகப் பரவிவரும் இந்த கொரோனா தொற்றினால் இதுவரை 60 இலட்சத்து 41 ஆயிரத்து 638பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மரணித்துவரும் நிலையில் இதுவரை இந்த வைரஸ் தொற்றினால் 94ஆயிரத்து 971 பேர் மரணித்துள்ளனர்.
இதனைவிட, பிரேஸிலில் இதுவரை 47 இலட்சத்து 18 ஆயிரத்து 115 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 441 பேர் மரணித்துள்ள நிலையில் அதிக மரணங்கள் பதிவான நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் 11 இலட்சத்து 51 ஆயிரத்து 438 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொலம்பியா மற்றும் பெருவில் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஸ்பெயின், மெக்ஸிகோ, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளில் ஏழு இலட்சம் பேருக்கு மேலும், தென்னாபிரிக்கா, பிரான்ஸ், சிலி, ஈரான், பிரித்தானியா ஆகிய நாடுகளில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்டோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.