Main Menu

உலகப் புகழ்பெற்ற கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ் ஓய்வு!

உலகப் புகழ்பெற்ற ஸ்பெயினின் கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ், தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

39 வயதான இக்கர் காசிலாஸ் தலைமையில், 2010ஆண்டு ஸ்பெயின் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்தியது.

16 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கையில் மூன்று சம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், ஐந்து லா லிகா சம்பியன் பட்டங்களையும் வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.

ஸ்பெயின் அணி 2008ஆம் மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர்களை வெல்லவும் கசில்லாஸ் உதவியுள்ளார்.

போர்த்துகீசிய தரப்பில், 156 போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டு பிரைமிரா லிகா சம்பியன் பட்டங்களையும் ஒரு போர்த்துகீசிய கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டதற்கு பிறகு, எவ்வித போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்த நிலையில் அவர் தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஸ்பெயின் அணிக்காக 2000ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை 167 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதேபோல, ஸ்பெயினின் முன்னணி கால்பந்து கழக அணியான ரியல் மட்ரிட் அணிக்காக 1999ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை 510 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2015ஆம் ஆண்டு போர்டோ அணியில் இணைந்த இக்கர் காசிலாஸ், அந்த அணிக்காக 116போட்டிகளில் விளையாடியுள்ளார்.

25 வருடகால கால்பந்து வரலாற்றில் 1,000க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள இக்கர் காசிலாஸ்க்கு தற்போது இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், இரசிகர்கள் என பலரும் சமூகவலைதளங்களின் ஊடாக அவரின் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பகிரவும்...
0Shares