உலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். பிஞ்ச் 82 ரன்னில் அவுட்டாகினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷான் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் ஹேரி (20) கவுல்டர் நைல் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். முகமது அமிரின் அபார பந்து வீச்சால் கடைசி 48 பந்தில் 39 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து பின்னடைவை சந்தித்தது.
அதன் பின்னர், 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.
பாபர் அசாம் 30 ரன்னிலும், முகமது ஹபீஸ் 46 ரன்னிலும், ஹசன் அலி 35 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதிக்கட்டத்தில் கேப்டன் சர்ப்ராஸ் அகமதும், வஹாப் ரியாசும் வெற்றிக்காக போராடினர். ரியாஸ் 45 ரன்னில் அவுட்டானார். சர்ப்ராஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.