உலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து
12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
தொடரின் முதல் போட்டியில் தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.
12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமானது.
லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சார்பாக Jonny Bairstow மற்றும் Jason Roy ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியது.
முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசியதுடன் இரண்டாவது பந்தில் ஜொனி பெயார்ஸ்டோ ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.
எனினும், அடுத்து இணைந்த ஜேஸன் ரோய் – ஜோ ரூட் ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
இவர்கள் இருவரும் அடுத்தடுத்து அரைச்சதங்களைக் கடந்தனர்.
இரண்டாம் விக்கெட்டில் 106 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில், ஜேஸன் ரோய் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஜோ ரூட் 51 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அணித்தலைவர் Eoin Morgan மற்றும் Ben Stokes ஜோடி 106 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.
Eoin Morgan 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் 78 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் லுங்கி நிகிடி 3 விக்கெட்களையும், கெகிஷோ ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கான 312 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்கா ஆரம்பத்திலேயே சிரமத்திற்குள்ளானது.
நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஹாசிம் அம்லா உபாதை காரணமாக களத்தைவிட்டு வெளியேறினார்.
Aiden Markram 11 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் Faf du Plessis 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
நம்பிக்கை அளிக்கும் விதமாக துடுப்பெடுத்தாடிய Quinton de Kock 68 ஓட்டங்களையும், Rassie van der Dussen 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
எனினும், ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இங்கிலாந்து வீரர்களின் அபாரத் திறமைக்கு முன்பாக தென் ஆபிரிக்க அணியால் 39. 5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களையே பெற முடிந்தது.
Jofra Archer 3 விக்கெட்களையும், Liam Plunkett, Ben Stokes ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.