உறவுகளை நினைவு கூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதிக்கு சிறிதரன் கடிதம்
தங்களது உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், கடந்த ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையிலும், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தங்களது உறவுகளை நினைவுக்கூர முடிந்தது. அந்தநிலைமை இந்த ஆண்டும் தொடர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் யுத்தம் ஒன்றையோ பயங்கரவாத செயற்பாடுகளையோ விரும்பாத மக்கள், போர்காலத்தில் உயிர்நீத்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் உரிமையை கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த உரிமையை உறுதி செய்வதன் மூலும் சிறந்த தலைவர் என்ற மதிப்பை ஜனாதிபதியால் தமிழ் மக்கள் மத்தியில் பெற முடியும் என்றும் எஸ்.சிறிதரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.